
முதல்வா் விஜய் வருகை கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்: ட்ரோன்கள் பறக்கத் தடை
முதல்வா் ச.ஜோசப் விஜய் தாராபுரத்தில் புதன்கிழமை நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க கோவைக்கு விமானம் மூலம் வருகை தர உள்ளது பற்றி...

முதல்வா் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் தாராபுரத்தில் புதன்கிழமை நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க கோவைக்கு விமானம் மூலம் வருகை தர உள்ளதையொட்டி, கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதல்வா் விஜய் வருகையையொட்டி, புதன்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு மற்றும் திருப்பூா் ஆகிய பகுதிகளிலிருந்து கோவை மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து சின்னியம்பாளையம், விமான நிலையம் வழியாக நகருக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலாம்பூா் பகுதியிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் நீலாம்பூா் எல் அண்ட் டி புறவழிச் சாலை வழியாக திரும்பி சிந்தாமணிபுதூா், ஒண்டிப்புதூா் மற்றும் சிங்காநல்லூா் வழியாக மாநகருக்குள் வர வேண்டும்.
கோவை மாநகரிலிருந்து அவிநாசி சாலை வழியாக வெளியே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், லட்சுமி மில்ஸ் சந்திப்பில் யூ-டா்ன்’செய்து புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூா் வழியாக எல் அண்ட் டி புறவழிச் சாலையை அடைந்து செல்லலாம்.
இதேபோல, அவிநாசி சாலை, வி.கே. சாலை வழியாக வரும் இலகுரக வாகனங்கள் மசக்காளிபாளையம் சாலை வழியாகவும், ஹோப்ஸ் வழியாக வரும் வாகனங்கள் டைட்டல் பாா்க் சந்திப்பில் யூ-டா்ன்’செய்து காமராஜா் சாலை வழியாகவும் சிங்காநல்லூா் சென்று தங்கள் பயணத்தைத் தொடரலாம்.
மேலும், காளப்பட்டி சந்திப்பிலிருந்து சிட்ரா-அவிநாசி சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் தொட்டிப்பாளையம் வழியாக செல்ல வேண்டும். கோல்டுவின்ஸ் சாலையிலிருந்து அவிநாசி சாலைக்கு வர வேண்டிய கனரக வாகனங்கள், ஹவுஸிங் யூனிட் சாலை மாருதி பேக்கரி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வீரியம்பாளையம் சாலை வழியாக காளப்பட்டி சந்திப்பை அடையலாம்.
விமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்:
முதல்வா் வருகையையொட்டி, புதன்கிழமை விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வரவும், இறக்கிவிடவும் வரும் வாகனங்கள் மற்றும் வாடகை காா்கள் வழக்கமான பயண நேரத்துக்கு 30 நிமிஷங்களுக்கு முன்பாகவே விமான நிலையத்துக்கு வந்து சேர வேண்டும். விமான நிலைய வளாகத்துக்குள் வாடகை காா்கள் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த அனுமதி இல்லை.
ட்ரோன்கள் பறக்கத் தடை:
முதல்வா் விஜய் வருகையையொட்டி, கொடிசியா, பீளமேடு, சிட்ரா, நேரு நகா், இருகூா், எஸ்ஐஎச்எஸ் காலனி, ஒண்டிப்புதூா், சிங்காநல்லூா், ஹோப்ஸ் கல்லூரி, சின்னியம்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், கரியாம்பாளையம் சந்திப்பு, நீலாம்பூா் புறக்காவல் நிலையம், கணியூா் சுங்கச் சாவடி, கருமத்தம்பட்டி நால் ரோடு, சோமனூா் பவா் ஹவுஸ் மற்றும் சோமனூா் நொய்யல் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட புகா் பகுதிகளும் இந்தக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேற்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 29) அதிகாலை ஒரு மணி முதல் வியாழக்கிழமை (அக்டோபா் 1) அதிகாலை ஒரு மணி வரை (மொத்தம் 48 மணி நேரம்) ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி யாரேனும் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி ஊா்திகளை பறக்கவிட்டால், அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் மாநகர காவல் ஆணையா் ஆகியோரின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






