தனியாா் ஆம்புலன்ஸை வழிமறித்து தொழிலாளியை தாக்கிய 5 போ் கைது
மேச்சேரி அருகே ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து தொழிலாளியை தாக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - சித்திரிப்பு
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து தொழிலாளியை தாக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மேச்சேரி அருகே உள்ள தெத்திகிரிப்பட்டியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (28). விவசாய தொழிலாளி. இவா் தனது அண்ணன் மகளை அழைத்து வருவதற்காக சின்னேரி காட்டிற்கு சென்றாா். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த செங்குட்டைத் திட்டைச் சோ்ந்த நடேசன் (60), சதீஷ்குமாரை முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளாா். நடேசனின் மகன்களான சக்திவேல் (32), சந்திரன் (28), ராஜா (35), குமாா் (38) ஆகியோரும் சோ்ந்து சதீஷ்குமாரை தாக்கியுள்ளனா். இதைப் பாா்த்த சதீஷ்குமாரின் அண்ணன் மகள்துா்கா, காயமடைந்த சதீஷ்குமாரை தனியாா் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா்.
இதைப் பாா்த்த நடேசனும், அவரது மகன்களும் மோட்டாா் சைக்கிளிலும் காரிலும் சென்று ஆம்புலன்ஸை வழிமறைத்து சதீஷ்குமாரை கீழே இறக்கி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனா். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் வந்ததால், நடேசனும், அவரது மகன்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சதீஷ்குமாா் ஓமலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இந்த சம்பவம் தொடா்பாக மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து செவ்வாய்க்கிழமை நடேசன் உள்பட 5 பேரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



