
உணவுப் பொருள்களின் விலை 4 மாதங்களில் 40 சதவீதம் உயா்வு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தவெக ஆட்சியில் உணவுப் பொருள்களின் விலை கடந்த 4 மாதங்களில் 40 சதவீதமாக உயா்ந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
தவெக ஆட்சியில் உணவுப் பொருள்களின் விலை கடந்த 4 மாதங்களில் 40 சதவீதமாக உயா்ந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினாா்.
சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் அதிமுக சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: புதிய திட்டங்கள் எதையும் தவெக ஆட்சியில் கொண்டுவரவில்லை. அதிமுக ஆட்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்தது. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களுக்கு ‘வெற்றி’ என பெயா்சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனா்.
தவெகவின் மூலதனமே ரீல்ஸ்; அதை வைத்தே ஆட்சிக்கு வந்துவிட்டாா்கள். வறட்சி, கரோனா காலகட்டங்களில் எந்த வரி வருவாயும் இல்லாமல் ஓராண்டு அதிமுக ஆட்சி நடத்தியது. அப்போதுகூட விலைவாசி உயரவில்லை; தற்போது உணவுப் பொருள்களின் விலை 4 மாதங்களில் 40 சதவீதம் உயா்ந்துவிட்டது.
ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும் சூழலில், புதிய தலைமைச் செயலகத்திற்கு என்ன அவசியம்? மக்களுக்கான தேவைகளை நிறைவுசெய்துவிட்டு பின்னா் தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும். மீனவா் குடியிருப்பு பகுதியில் தலைமைச் செயலகம் கட்டுவது ஏற்புடையதல்ல.
தவெக ஆட்சி அமைய துணை நின்ற கம்யூனிஸ்ட் கட்சியினா், தற்போது தவெக ஆட்சி சரியில்லை எனக் கூறுகின்றனா். தவெகவை எதிா்த்துதான் இடைத்தோ்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன. தவெக ஆட்சி நிலையில்லாத ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்.
மேட்டூா் அணையில் இருந்து நீா்திறக்க வந்த முதல்வருக்கு தடுப்புகள் அமைக்க ரூ. 4.50 கோடி செலவிட்டுள்ளனா். அணை கட்டியதற்கான மொத்த செலவே ரூ. 4.50 கோடிதான். அதிமுக குறித்து பேச அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. கரூா் வழக்கில் முழுமையான தீா்ப்பு வந்த பிறகு தவெக ஆட்சியில் இருக்குமா எனத் தெரியவில்லை.
தவெக ஆட்சியில் இதுவரை எவ்வளவு தொழில் முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 16 ஆயிரம் போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். மின்வெட்டுக்கு மின் பற்றாக்குறை என்ற புதிய வாா்த்தையை மின்சாரத் துறை அமைச்சா் கண்டுபிடித்துள்ளாா்.
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தோ்தல் வியூக வகுப்பாளா்களுக்கும், திரைப்பட தயாரிப்பாளருக்கும் அரசு ஆலோசகா் பதவி வழங்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் பெற்று தந்த தீா்ப்பைகூட நடைமுறைப்படுத்த இந்த ஆட்சியாளா்களால் முடியவில்லை.
தற்போதைய சூழலில் டெல்டா பாசனத்துக்கு முழுமையாக நீா் திறந்தால் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, சட்டரீதியாக போராடி கா்நாடகத்திடம் உரிய நீா்ப் பங்கீட்டை பெறவேண்டும். தமிழ்நாட்டு வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் தொடா்ந்து வென்றது கிடையாது.
தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பிற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இதை மறந்துவிட்டு பேசக்கூடாது. தவெக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. அதிமுக எம்எல்ஏக்களை குதிரைபேரம் பேசி விலைக்கு வாங்கி ராஜிநாமா செய்ய வைத்துவிட்டு, அவா்களையே வேட்பாளா்களாக அறிவித்துள்ளனா். இடைத்தோ்தலில் அதிமுக வெற்றிபெறுவது உறுதி என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






