போடி மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்குமா?

போடி, டிச.29: போடி பகுதியில் மலை கிராம மக்கள்  சாலை, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக அரசு உதவியை எதிர்பார்த்துள்ளனர்.  போடி மலைகள் சூழ்ந்த பகுதி ஆகும். போடிமெட்டு, புலியூத்து,
Published on
Updated on
1 min read

போடி, டிச.29: போடி பகுதியில் மலை கிராம மக்கள்  சாலை, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக அரசு உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

 போடி மலைகள் சூழ்ந்த பகுதி ஆகும். போடிமெட்டு, புலியூத்து, குரங்கனி, கொட்டகுடி, முட்டம், டாப் ஸ்டேஷன், முதுவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன், சாலைப்பாறை, காரிப்பட்டி, கொழுக்குமலை, பிச்சங்கரை, சின்னமொடக்கு, ஊத்தாம்பாறை, ஊஞ்சல், கூக்குத்தோடு, மல்லிப்பட்டி, அத்தியூத்து, இலங்காவரிசை ஆகியவை போடியைச் சுற்றி அமைந்துள்ள மலை கிராமங்கள்.

 இங்கு பழங்குடியின மக்கள், விவசாயிகள் வசிக்கின்றனர். இப்பகுதியில் காப்பி, ஏலம், மிளகு, மா, இலவு, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, நாரத்தை, ஆரஞ்சு, பலா ஆகியவை பயிரிடப்படுகின்றன.

 மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் தேவைகளுக்காகவும், விளை பொருள்களை சந்தைப்படுத்தவும் போடி நகருக்குத்தான் வரவேண்டும். இந்த மலை கிராமங்களில் போடிமெட்டு, புலியூத்து, குரங்கனி உள்பட சில கிராமங்களுக்கு மட்டுமே சாலை வசதி உள்ளது. சில கிராமங்களுக்குப் போக்குவரத்து வசதி உள்ளது.

 ஆனால் முட்டம், அத்தியூத்து, முதுவாக்குடி, ஊத்தாம்பாறை உள்பட பல மலை கிராமங்களில் சாலை, போக்குவரத்து வசதிகள் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். சில கிராமங்களில் மின்வசதியும் இல்லை. ஊராட்சி நிர்வாகம் சூரிய சக்தியில் இயங்கும் மின்விளக்குகளை வழங்கியிருந்தாலும் அவை போதுமானதாக இல்லை.

 மலை கிராம மக்கள் உணவுப் பொருள்களை கொண்டு செல்லவும், விளை பொருள்களை போடி நகருக்கு கொண்டு வரவும் கழுதை, குதிரை போன்றவற்றையே நம்பி வாழ்கின்றனர். அவசர மருத்துவ சிகிச்சைக்குக் கூட டோலி கட்டி தூக்கி வரும் அவல நிலை உள்ளது. மலை வாழ் மக்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கவும் போதிய வசதி இல்லை.

 பிச்சங்கரை, ஊத்தாம்பாறை, அத்தியூத்து, சோலையூர், அகமலை உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை அமைத்து போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 அதேபோல் முதுவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன் உள்பட கிராமங்களுக்கு சாலை அமைத்து ஜீப் போன்ற வாகனங்கள் செல்ல வசதி செய்து தர வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 மேலும் மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மாதம் ஒரு முறையாவது அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று பரிசோதனை, சிகிச்சை, ஆலோசனை வழங்க வேண்டும்.

இதன் மூலம் இந்தமக்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com