மதுரை, நவ. 14: மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் புரோக்கர்களின் பிடியில் சிக்கி தவிக்கிறது (படம்). ஒவ்வொரு பணிக்கும் பணம் கொடுத்தால்தான் காரியம் நடைபெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால் திருச்சி செல்லவேண்டியிருந்தது.
இதைத் தவிர்க்கவே தென் மாவட்ட மக்களின் வசதிக்காக 2007, டிசம்பர் 15-ல் மதுரையில் பாஸ்போர்ட் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது.
இங்கு தினமும் "தத்கல்' முறையில் 150 விண்ணப்பங்கள் மீதும், சாதாரண வகை பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் சுமார் 300 மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.
புரோக்கர்களின் பிடியில்: மதுரை அலுவலகத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் உள்ளனர். சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பிக்க ரூ.1,000 கட்டணம் செலுத்தி 1 மாதத்துக்கும் மேலாக காத்திருக்க நேரிடுகிறது. அதே நேரத்தில் தட்கல் முறையில் விண்ணப்பிப்போர் ரூ.2,500 செலுத்தி 1 வாரம் முதல் 15 தினங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதில், போலீஸ் விசாரணை, முகவரி சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளால் பாஸ்போர்ட் பெறுவதில் விண்ணப்பதாரர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக போலீஸ் விசாரணை விரைவில் முடிவதில்லை என, விண்ணப்பதாரர்களிடையே பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால், புரோக்கர்கள் தலையிட்டு பாஸ்போர்ட்டுகளை விரைவில் பெற்றுத் தருகிறார்கள். இதற்காக சாதாரண பாஸ்போர்ட் வகைக்கு ரூ.800 முதல் ரூ.900 வரையிலும், தத்கல் முறையில் பாஸ்போர்ட்டுக்கு ரூ. 7,000 வரையிலும் புரோக்கர்கள் பணம் வசூலிக்கின்றனர். இவ்வாறு பணம் கொடுத்து பாஸ்போர்ட்டுகளை பெற்றுத் தருவதால் பல நேரங்களில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுகிறது. அதிகாரிகளை புரோக்கர்கள் "கவனித்து' விடுவதால் போலி ஆவணங்கள் விஷயம் பெரிதாக கண்டுகொள்ளப்படுவிதில்லை எனக் கூறப்படுகிறது.
இதேபோல், பாஸ்போர்ட் புதுப்பிப்பது, குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெறுவது, பாஸ்போர்ட் புத்தக பக்கங்கள் முடிந்த நிலையில் கூடுதல் பக்கங்களை சேர்ப்பது, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு புரோக்கர்களுக்கு பணம் கொடுத்தால் வேலை விரைவில் முடித்துத் தரப்படுகிறது.
கணக்குக்காக வழக்குப் பதிவு: இதற்கிடையே புரோக்கர்கள் நடமாட்டம் குறித்து மாதத்துக்கு சில வழக்குகளை உள்ளூர் போலீஸôர் பதிவு செய்கின்றனர். சிபிஐ நடவடிக்கையை தவிர்க்கவே, சிலரை புரோக்கர்கள் என பிடித்து போலீஸôரால் வழக்குகள் பதிவு செய்து கணக்குக் காட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத புரோக்கர் ஒருவர் கூறுகையில், நாங்கள் வசூலிக்கும் பணத்தில் அதிகாரிகள், போலீஸôருக்கு பங்கு கொடுக்க வேண்டியுள்ளது. இதுதவிர வழக்குப் பதிவதற்காக மாதத்துக்கு 2 நபர்களை போலீஸிடம் ஒப்படைக்க வேண்டியுள்ளது. இதையெல்லாம் "அட்ஜஸ்ட்' செய்தால்தான் புரோக்கராக இங்கு நீடிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஸ்போர்ட் அதிகாரி மேத்யூ கூறுகையில், புரோக்கர்கள் நடமாட்டம் இருப்பது உண்மையே. அவர்கள் மீது போலீஸôர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மேலும் தீவரப்படுத்தப்பட்டு வருகிறது
இதுவரை சாதாரண மற்றும் தத்கல் முறையில் சுமார் 2.41 லட்சத்துக்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் இந்த அலுவலகத்தால் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.