விவேகானந்தர் நினைவுத்தூண் புதுப்பிக்கப்படுமா?

ராமநாதபுரம், அக். 25:   அமெரிக்காவில் சிகாகோ நகரில் 11.9.1893-ல் நடைபெற்ற சர்வ மதத் தலைவர்கள் மாநாட்டில் இந்தியாவின் பெருமைகளை உலகுக்கு உணர்த்திவிட்டு தாயகம் திரும்பிய வீரத்துறவி சுவாமி விவேகானந்தரை ர

ராமநாதபுரம், அக். 25:   அமெரிக்காவில் சிகாகோ நகரில் 11.9.1893-ல் நடைபெற்ற சர்வ மதத் தலைவர்கள் மாநாட்டில் இந்தியாவின் பெருமைகளை உலகுக்கு உணர்த்திவிட்டு தாயகம் திரும்பிய வீரத்துறவி சுவாமி விவேகானந்தரை ராமநாதபுரம் மாவட்ட மக்கள் வரவேற்ற சரித்திரம் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது.

  ராமநாதபுரம் சீமையை ஆண்டு வந்த மன்னர் பாஸ்கர சேதுபதியின் தலைமையில் முகவை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்கு அளித்த வரவேற்பு நிகழ்வுகள் இன்றைய இளைய சமுதாயம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய அரிய பொக்கிஷங்கள்.

  மேலைநாட்டுக்கு செல்லும் எண்ணத்தை முதன்முதலில் தந்து அதற்காக என்னை ஊக்குவித்து உதவியும் செய்தவர் ராமநாதபுரம் மன்னர்தான். எனவேஸ இந்தியத் திருமண்ணை அவரது பூமியில் தொடுவதே சிறப்பு என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், ராமநாதபுரம் வந்து பெருமை சேர்த்தார் விவேகானந்தர்.

  தாய்நாட்டின் மீதும் தாய் மண்ணின் மீதும் அவருக்கு இருந்த பாசத்தை பார்த்த மன்னரும் அவரது பிரதிநிதிகள் மற்றும் முகவை மக்கள் அனைவரும் விவேகானந்தரின் காலில் விழுந்து வணங்கினர்.

  மக்கள் கூட்டத்தின் நடுவே வாழ்த்தொலிக்கும் வரவேற்பு வைபவங்களுக்கும் இடையே சுவாமிஜியை அரசு வாகனத்தில் அமரச் செய்து தனது பரிவாரங்களுடன் அருகில் நடந்து சென்றாராம் மன்னர் பாஸ்கர சேதுபதி. சிறிது தூரம் சென்றதும் வண்டியை இழுத்துக்கொண்டு வந்த குதிரைகளை அவிழ்த்து விட்டு மற்றவர்களுடன் சேர்ந்து மன்னரும் வண்டியை இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார்.

  ராமேசுவரம் ஸ்ரீராமநாதசுவாமியை தரிசித்து திருப்புல்லாணி வழியாக கடல் மார்க்கமாக ராமநாதபுரம் நோக்கி தன் பக்தர்களுடன் சுவாமி விவேகானந்தர் வந்தார். ராமநாதபுரத்தை நெருங்கியபோது ஏரி ஒன்று இருந்ததால் (இன்றைய சக்கரக்கோட்டை கண்மாய்) அதை சிறிய படகு ஒன்றில் கடந்து நகரின் நுழைவு வாயிலை 29.1.1897-ல் அடைந்தார்.

  ராமநாதபுரம் நகருக்குள் நுழையும் நேரத்தில் விவேகானந்தரை வரவேற்க பீரங்கிகள் முழங்கின. வாணவேடிக்கைகள் நடந்தன. பின்னர் மன்னரின் தலைமையில் ராமநாதபுரத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு ஊர்வலம் தொடங்கியது. சுவாமிஜிக்கு பக்கத்தில் மன்னர் பாஸ்கரசேதுபதியின் சகோதரர் தினகர் சேதுபதி மெய்க்காப்பாளராக நின்றிருந்தார்.

  மன்னர் பாஸ்கர சேதுபதியோ ஊர்வலத்தில் மக்களோடு மக்களாக நடந்தே வந்தார். இருபுறமும் தீப்பந்தங்கள் ஒளி வீசின. ஊர்வலத்தில் வெற்றி வீரன் வருகிறான் என்ற பாடல் ஆங்கிலத்தில் அரண்மனை இசைக் குழுவினரால் வாசிக்கப்பட்டது.

  அரச வண்டியில் அமர்ந்து வந்த விவேகானந்தர் மன்னரின் வேண்டுகோளை ஏற்று அரசரின் பல்லக்கில் பவனி வந்தார். பல்லக்கு ஊர்வலத்தை மன்னரின் தம்பியான தினகர் சேதுபதி தனது அரண்மனை வழியாகவும் அழைத்து செல்ல விரும்பியதால் ஊர்வலம் அவ்வழியாக வந்தது.

  ராஜா தினகர் சேதுபதி அரண்மனை முன்பாகவும் சுவாமி விவேகானந்தருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

  இந்த வரவேற்பை என்றும் நினைவு கூரும் வகையில் விளக்குடன் கூடிய வரவேற்பு நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த நினைவுத்தூணுக்கு அருகிலேயே மசூதி ஒன்றும் உள்ளது. இம் மசூதியில் தொழுகையும் சிறப்பாக நடந்து வருகிறது. வரலாற்றுச் சின்னமாக விளங்கும் இந்த வரவேற்பு நினைவுத்தூண் மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக் காட்டாகவும் இருந்து வருகிறது.

  இத்தகைய வரலாற்றுச் சிறப்புடைய வரவேற்பு நினைவுத்தூண் இன்று பராமரிப்பின்றி இருக்கிறது. ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் ஞானதீபா சேவா சங்கம் என்ற அமைப்பு சுவாமிஜியின் நினைவு தினத்தன்று மட்டுமே இதனை சுத்தம் செய்கிறது. கடந்த 5.11.1968-ல் இருந்த நகர்மன்ற தலைவர் எஸ்.பூபதி, நகராட்சி ஆணையாளர் எஸ்.சீதாராமன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நினைவுத்தூணை புதுப்பித்து தூணின் உச்சியில் ஒரு டூம் லைட் ஒன்றையும் அமைத்து விழாக் கொண்டாடியுள்ளனர். இதற்கென்று ஒரு கல்வெட்டும் பதித்துள்ளனர்.

  தற்போது இந்த டூம் லைட் உடைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த பல்பும் திருடு போய் இருக்கிறது. அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த வரலாற்று நினைவுச் சின்னம் மேலும் சேதப்படுத்தப்பட்டு விடாமல் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

  தன்னார்வ அமைப்புகள், வங்கிகள் அல்லது தனியார் நிறுவனங்கள் இதனை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்று நடத்திட முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் விருப்பம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com