ஆண் குழந்தைகளை குறி வைக்கும்

விநோத நோய்! ராமநாதபுரம், ஆக. 31: உடலை படிப்படியாக ஊனமாக்கி, உயிரைக் குடிக்கும் "மஸ்குலர் டிஸ்ட்ரஃபி' என்ற நோய், பெரும்பாலும் ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கக் கூடியது.  மரபணு நோய்: இந்த நோய்க்கு இதுவரை ம
Published on
Updated on
2 min read

விநோத நோய்! ராமநாதபுரம், ஆக. 31: உடலை படிப்படியாக ஊனமாக்கி, உயிரைக் குடிக்கும் "மஸ்குலர் டிஸ்ட்ரஃபி' என்ற நோய், பெரும்பாலும் ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கக் கூடியது.

 மரபணு நோய்: இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. "மஸ்குலர் டிஸ்ட்ரஃபி' என அழைக்கப்படும் இந்த நோய், மரபணு தொடர்பான ஏழு வகை நோய்களின் பொதுப் பெயராகும்.

 இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 20 முதல் 30 வயதுக்குள் பெரும்பாலும் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த நோயின் வீரியத்தை குறைந்தது 5 வயதுக்கு மேல்தான் உணர முடியும்.

 சில அறிகுறிகள், மருத்துவப் பரிசோதனைகள் மூலம்தான், இந்நோயைப் பற்றி அறியமுடியும் எனத் தெரிவிக்கும் மேலைநாட்டு மருத்துவர்கள் மற்றும் மரபணு ஆராய்ச்சியாளர்கள், இந்நோய்க்கான மருந்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 மதுரையில் அமைப்பு: இந்த நோய் தாக்கிய குழந்தைகளைக் கண்டறிய, மதுரையில் "மஸ்குலர் டிஸ்ட்ரஃபி பவுண்டேஷன் ஆப் இந்தியா' என்ற அமைப்பு செயல்படுகிறது.

 மருத்துவர்கள், கல்விப் பணியாளர்கள், சமூகப் பணியாளர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். முதல் கட்டமாக, தென்மாவட்டங்களில் இந்நோய் தாக்கிய குழந்தைகளைக் கண்டறிய, இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

 இந் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளிகள், சிறப்பு மருத்துவ மையங்கள் அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் அறங்காவலர் டாக்டர் லத்தீப், இந்நோயின் தன்மைகள் மற்றும் பாதிப்பின் அறிகுறிகள் குறித்து கூறியதாவது:

 ""இந்த நோய் அபூர்வமாக பெண் குழந்தைகளைத் தாக்குகிறது. நமது நாட்டில் ஒவ்வொரு 2000 குழந்தைகளுக்கும், ஒரு ஆண் குழந்தை இந் நோயால் பாதிக்கப்படுகிறது.

 நோய் தாக்கியதைக் கண்டறிவது கடினமானது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை, அடிக்கடி கீழே விழும். படிகளில் ஏறும்போது, பிடிப்பின்றி ஏற இயலாமல் போகும். 2 வயது முதல் 5 வயதுக்கு உள்பட்ட காலத்தில், நோய் தாக்கப்பட்ட குழந்தையின் நடை, ஓட்டம் வித்தியாசப்படும்.

 கால்களை நேராக வைக்க முடியாமல் வளைத்து வைக்கலாம். வெளிப் பார்வைக்கு, குழந்தை நன்றாகவே தோற்றமளிக்கும். எந்தவித ஊனமோ, குறைபாடோ வெளியில் தெரிவதில்லை.

 கருவில் உருவான இந்நோய், படிப்படியாக தீவிரமடைந்து, 10-12 வயதில் முழுவதும் நடக்கவோ, நிற்கவோ, நீண்ட நேரம் அமரவோ முடியாத நிலை ஏற்படும். சுயமாக, ஒரு டம்ளர் தண்ணீரைக்கூட தூக்க முடியாது.

 12-18 வயதில் உடலின் மற்ற உறுப்புகளில், நோயின் தாக்கம் தீவிரமடையத் தொடங்கும். சுவாசம், ஜீரணம் தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும்.

 18 வயதுக்கு மேல் படுத்த படுக்கையாகவும், 20-30 வயதுக்குள் உயிரிழப்பும் நேரிடலாம். நோய் பாதித்தவர்கள் 24 மணி நேரமும் ஒருவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்'' என்றார் டாக்டர் லத்தீப்.

 ராமநாதபுரத்தில்...: ராமநாதபுரத்தில், மாற்றுத் திறன் உடையோருக்காக அண்மையில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில், இந்த நோய் குறித்த துண்டுப் பிரசுரங்களை மதுரை மக்கள் கண்காணிப்பகம் அமைப்பினர் வழங்கினர்.

 இந்த அமைப்பின் நிறுவனரும், இயக்குநருமான மதுரையைச் சேர்ந்த ம. லூயிஸ் கூறியதாவது:

 "இந் நோயால், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்துள்ளனர் என இதுவரை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

 தமிழகத்தில் மட்டும், சுமார் 2000 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. எங்கள் அறக்கட்டளையில் மதுரை, திருமங்கலம், கே.கே.நகர், பாண்டியராஜபுரம், அலங்காநல்லூர், கோவில்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 78 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மருத்துவர்களுக்கு இந்நோய் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடத்தப்பட்டது' என்றார் லூயிஸ். தொடர்புக்கு:

 99943 68500, 99943 68550

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com