பெயரளவில் செயல்படும் மாவட்ட திட்ட குழுக்கள்

 மதுரை, செப். 18: தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் செயல்பட்டு வரும் மாவட்டத் திட்டக் குழுக்களின் செயல்பாடுகள் தற்போது பெயரளவிலேயே உள்ளன.  எனவே, இக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறும் வகைய
Updated on
1 min read

 மதுரை, செப். 18: தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் செயல்பட்டு வரும் மாவட்டத் திட்டக் குழுக்களின் செயல்பாடுகள் தற்போது பெயரளவிலேயே உள்ளன.

 எனவே, இக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறும் வகையில் இதன் செயல்பாடுகளை மாற்றி அமைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 உள்ளாட்சி அமைப்புகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கக் கூடிய வகையில் ஆலோசனைகள் அளித்து, அதில் கிடைக்கும் வருவாயை மனிதவள மேம்பாடு தொடர்பான திட்டங்களை வகுத்துக் கொடுக்கவும், மாவட்டங்களில் உள்ள ஊராட்சிப் பகுதிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளத் தேவையான அடிப்படை வசதிகள் என்ன என்பதை ஆராயும் நோக்கத்திலேயே தமிழகத்தில் 14.11.1997-ல் மாவட்டத் திட்டக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.

 28 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இத்திட்டக் குழுக்களில், தலைவர்களாக அந்தந்த மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர்கள் துணைத் தலைவர்களாகவும், மாநகராட்சிப் பகுதிகளில் மேயர்கள் நிரந்தர உறுப்பினர்களாகவும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 இதுதவிர தேர்வு செய்யப்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 6 பேரும், மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 பேரும், நகராட்சிக் கவுன்சிலர்கள் 2 பேரும், பேரூராட்சிக் கவுன்சிலர்கள் 2 பேரும் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

 ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்துவது மட்டுமே இக் குழுக்களின் பிரதான செயல்பாடாக உள்ளதே தவிர, இக் குழுக்களின் பரிந்துரைகளும், தீர்மானங்களும் பேப்பரில் எழுதப்படும் எழுத்துக்களாகவே கருதப்படுகின்றன.

 இதற்கென்ற எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் துணைத் தலைவர் என்பதால் பெரும்பாலான மாவட்டங்களில் நடைபெறும் திட்டக் குழுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பதில்லை என்ற குறைபாடும் உள்ளது. இதனாலேயே இக்கூட்டங்கள் முக்கியத்துவம் பெறாமல் போய்விடுகின்றன.

 மாநிலத் திட்டக் குழு உத்தரவின்பேரில் மாவட்டத் திட்டக் குழுக்கள் ஆய்வு செய்த (10-வது ஐந்தாண்டுத் திட்டத்தில்) "2002-2007 -ம் ஆண்டுக்கான கிராம வளர்ச்சி அறிக்கை' விவரம் இன்றளவும் மாநிலத் திட்டக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்படாமல் அந்தந்த மாவட்டத் திட்டக் குழு அலுவலகங்களிலேயே காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன.

 மாநிலத் திட்டக் குழுவும் இதுதொடர்பான அறிக்கையை இதுவரை மாவட்டத் திட்டக் குழுவிடம் கோரவில்லை.

 இதனால், மாவட்டங்கள் தோறும் திட்டக் குழுக்கள் இருந்தும் அவற்றின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அவைகள் பெயரளவிலேயே செயல்படும் சூழ்நிலை உள்ளது.

 கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மேற்குவங்கம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாநிலத் திட்டக்குழுவின் மேற்பார்வையில் மாவட்டத் திட்டக் குழுக்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் இக்குழுக்களின் செயல்பாடுகள் பெயரளவிலேயே உள்ளன.

 எனவே, போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஊரக வளர்ச்சித் திட்டங்கள் மேம்பாட்டுக்காக, மாவட்டத் திட்டக் குழுக்களின் முழுமையான செயல்பாடுகள் மற்றும் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com