

மதுரை, செப். 21: தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற கைத்தறி நெசவாளர்கள் சுமார் 8,000 பேர் கடந்த 7 மாதங்களாக ஓய்வூதியம் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டாவது ஓய்வூதிய நிலுவைத் தொகை மொத்தமாக அக்டோபர் மாதம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு கைத்தறி நெசவாளர்களிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் 1947-ம் ஆண்டு மே மாதத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கான கூட்டுறவுச் சங்கம் தொடங்கப்பட்டது.
தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கான கூட்டுறவுச் சங்கங்களில் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுபெற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்களில் தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாதந்தோறும் ரூ.400 ஓய்வூதியமாகப் பெற்று வருகின்றனர்.
விவசாயிகளுக்கு அடுத்தபடியாக கைத்தறி மற்றும் நெசவுத் தொழிலாளர்கள் தமிழகத்தில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
இவர்கள் நலன் கருதி தமிழகத்தில் 1996-ம் ஆண்டில் முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையிலான அரசின், கைத்தறி அமைச்சராக இருந்த என்.கே.கே. பெரியசாமி, கைத்தறி நெசவாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.150 வழங்கப்படும் என முதன்முதலில் அறிவித்தார்.
இத்தொகை ரூ.200 ஆக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.400 என வழங்கப்பட்டு வருகிறது.
7 மாதங்களாக வழங்கப்படவில்லை: இந்நிலையில் இத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் தமிழக அரசு சார்பில் 2009, பிப்ரவரி மாதத்துக்குப் பின் வழங்கப்படாமல் திடீரென நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால், முதுமையில் வாடும் நெசவாளர்கள் தற்போது கடும் அவதிக்குள்ளாக நேரிட்டுள்ளது.
இதுகுறித்து விவரம் கேட்டபோது, ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த நிதி கடந்த 7 மாதங்களாக கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
அரசுக்கு பலமுறை கடிதம் மூலம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.தெய்வராஜ் கூறுகையில், கைத்தறி நெசவாளர்கள் ஓய்வுக்குப் பின்னர் அவர்களின் முதுமைக் காலத்தின் வாழ்வாதாரத்துக்காகவே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தீபாவளிப் பண்டிகை விரைவில் வரவுள்ள நிலையில், கடந்த 7 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாதது ஓய்வு பெற்ற நெசவாளர்களிடையே மன இறுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே நிலுவையில் உள்ள ஓய்வூதியம் நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
நெசவாளர்கள் கோரிக்கை: நெசவாளர்கள் ஓய்வூதியம் பெற வேண்டுமென்றால் "சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில்' உறுப்பினர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருக்கவேண்டும்.
நெசவாளர்கள் கடைசி இரு ஆண்டுகள் (அதாவது 58 வயது முதல் 60 வயது வரை) கண்டிப்பாக பணியாற்றியிருக்க வேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகளால் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த (வயது முதிர்வு காரணமாக கடைசி இரு ஆண்டுகள் பணியாற்ற முடியாத) நெசவாளர்கள் கூட இத்திட்டத்தில் பயன்பெற தகுதியில்லாதவர்களாக ஆகிவிடுகின்றனர்.
எனவே, இதுபோன்ற நிபந்தனைகளை தளர்த்தி, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலேயே கைத்தறி நெசவாளர்கள் ஓய்வூதியத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என ஓய்வுபெற்ற நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.