அதிகரித்த வெப்பத்தால் மாங்காய் விளைச்சல் பாதிப்பு

மேலூர், ஏப். 13: இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டில் வெப்பநிலை அதிகரித்து உள்ளதால், அழகர்கோவில் மலை, அலங்காநல்லூர், கரந்தமலைத்தொடர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மா மரங்களில் மாங்காய் உற்பத்தி பாத
Published on
Updated on
2 min read

மேலூர், ஏப். 13: இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டில் வெப்பநிலை அதிகரித்து உள்ளதால், அழகர்கோவில் மலை, அலங்காநல்லூர், கரந்தமலைத்தொடர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மா மரங்களில் மாங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

  மாங்காய் வரத்து இன்மையால் சுமார் 200 கிராம் எடையுள்ள மாங்காய் ரூ.15}க்கும், மா வடுவுக்கான பிஞ்சுகள் கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது. மாம்பழம் வரத்தும் குறைவாக இருக்கும் என்பதால் நடப்பாண்டில் அவற்றின் விலை மிகமிக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

  மா மரங்கள் ஜனவரி மாதத்தில் பூக்கத் தொடங்கி ஏப்ரல் கடைசி முதல், மே மாதத்தில் பழுக்க வைக்க மாங்காய்களை பறிப்பது வழக்கம். அதன்பின் மாம்பழங்கள் மே கடைசியில் மார்கெட்டில் விற்பனைக்கு வரும்.

  ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததாலும், அதிகமாக வெப்பம் நிலவுவதாலும், பெரும்பாலான மரங்களில் அடியோடு காய்ப்பு இல்லை.

  கல்லாமை, காசாலட்டு போன்ற மா மரங்கள் மிகவும் அரிதாக சில இடங்களில் குறைந்த அளவே காய்த்துள்ளது. மாங்காய் அறுவடை சீசன் தொடங்கும் நிலையில் 90 சதவிகித மரங்கள் இளம் தளிர்விட்டு வளர்ந்து வருகிறது. 10 வயதுடைய நடுத்தர மரத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக 10 முதல் 20 காய்களே சில இடங்களில் காணப்படுகின்றன.

  அழகர்கோவில் மலைச்சரிவில் உள்ள சேக்கிபட்டி, பட்டூர், சாம்பிராணிப்பட்டி, நத்தம் கரந்தமலைத்தொடர் பகுதி, பரளி, அலங்காநல்லூர், பாலமேடு சுற்றுவட்டாரத்திலும் இந்நிலையிலேயே மாந்தோப்புகள் காணப்படுகிறது.

  மாங்காய் காய்ப்பின்மையால் சில காய்களையும் பாதுகாக்க இயலாமல் விவசாயிகள் பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். அவை ரூ.10 முதல் 15 வரை விற்பனையாகிறது. இதுபோல ஒட்டுமொத்தமாக மா தோப்புகள் காய்காமலிருப்பது இந்த ஆண்டுதான் என்கின்றனர் விவசாயிகள்.

  இதுகுறித்து மதுரை தோட்டக்கலைத் துறை அதிகாரி எஸ்.கலைச்செல்வன் (தொழில்நுட்பம்) கூறியதாவது:

  இந்த ஆண்டு முற்றிலும் மா மரங்கள் காய்காமல் இருப்பதற்கு பூமியின் வெப்ப உயர்வும், டிசம்பர், ஜனவரியில் மழை பெய்யாததும் காரணமாகும். பெரும்பாலான மா மரத் தோட்டங்கள் மானாவாரியாக மழையை எதிர்பார்த்தே உள்ளன. சில இடங்களில் மா தோப்புக்கு அதிக தண்ணீர் பாய்ச்சுவது தவறானது. இதனால் அதிக தளிர்களுடன் பசுமையாக இருக்கும்.

  பூக்கள் நிரம்பியிருப்பினும் காய்த்துப் பலன் தராது. இவ்வாறான தோட்டங்களில் பகுதி பகுதியாக கவாத்து செய்து சூரிய வெளிச்சம் மரத்தில் உள்ளே புகுமாறு செய்ய வேண்டும். 45 முதல் 50 வயதுடைய ஒட்டுரக மா மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி புதிய கன்றுகளை நடவேண்டும்.

  பனங்கப்பள்ளி, இமாம் பசந்த், அல்போன்சா, பங்களூரா, ஜகாங்கீர் போன்ற மாமரங்கள் ஓர் ஆண்டில் நன்கு காய்க்கும், மற்றொரு ஆண்டில் சரிவர காய்ப்பதில்லை. ஆனால் இந்த ஆண்டில் கடும் வெப்பம் காரணமாகப் பெரும்பாலான மரங்கள் முற்றிலும் காய்க்கவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com