விழிப்புணர்வு இல்லாததே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் மதுரை: 3 ஆண்டுகளில் பாம்பு கடிக்கு 167 பேர் சாவு

மதுரை, ஏப். 21: மதுரை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பாம்பு கடித்து 167 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 57 பெண்களும், 14 குழந்தைகளும் அடக்கம். உடனடியாக சிகிச்சை கிடைக்காததே உயிரிழப்புக்கு காரணமாகிவி
Updated on
2 min read

மதுரை, ஏப். 21: மதுரை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பாம்பு கடித்து 167 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 57 பெண்களும், 14 குழந்தைகளும் அடக்கம்.

உடனடியாக சிகிச்சை கிடைக்காததே உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளில் விவசாயக் கூலி வேலை செய்வோர் அதிகமாக உள்ளனர். இவர்களில் பலர் கடந்த சில ஆண்டுகளாக பாம்பு கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், விவசாய நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போரும் பாம்பு கடிக்கு உள்ளாவது தெரியவந்துள்ளது.

கடந்த 2007}ல் 1455 பேர் பாம்பு கடிக்கு உள்ளாகி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர். இதில் 894 ஆண்கள், 475 பெண்கள், 86 குழந்தைகள் அடங்குவர். இவர்களில் உரிய நேரத்தில் சிகிச்சை பெறாததால் 37 ஆண்கள், 29 பெண்கள், 3 குழந்தைகள் என 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜனவரி, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் குளிர்காலங்களில் அதிகமானோர் பாம்பு கடிக்கு ஆளாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த 2008}ல் 786 ஆண்களும், 418 பெண்களும், 98 குழந்தைகளும் பாம்பு கடிக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 35 ஆண்கள், 12 பெண்கள், ஒரு குழந்தை ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இதேபோல கடந்த 2009}ம் ஆண்டு 859 ஆண்களும், 459 பெண்களும், 168 குழந்தைகளும் பாம்பு கடிக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 26 ஆண்கள், 16 பெண்கள், 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளை விட 2009 }ல் குழந்தைகள் அதிகமானோர் பாம்பு கடிக்கு ஆளாகியிருப்பதும், இறப்பு எண்ணிக்கை கூடுதலாகியுள்ளதும் தெரியவந்துள்ளது.

பாம்பு கடியில் நாகம், கட்டு விரியன், சாரை, கண்ணாடி விரியன் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்திய அளவில் ஆன்ட்டி ஸ்நேக் வெனம் (அய்ற்ண் நய்ஹந்ங் யங்ய்ர்ம்) என்ற மருந்து அளிக்கப்படுவதாகவும், கொம்பேறி மூக்கன், சுருட்டை வகை பாம்பு கடிக்கு மருந்துகள் இல்லை எனவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

கிராமப்புறங்களில் பாம்பு கடிக்கு ஆளானோர் நீண்டதூரம் பயணித்து மதுரை அரசு மருத்துவமனைக்கு தாமதமாக வருவதாலேயே உயிரிழப்பு அதிகரித்திருப்பதாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகின்றனர்.

மேலும், பாம்பு கடித்த இடத்திற்கு அருகே கட்டுப்போட்டுவிட்டு 1 மணி முதல் 2 மணி நேரத்துக்குள் சிகிச்சைக்கு வரவேண்டும். பாம்பு கடித்த நோயாளிக்கு 8 ஊசிகள் முதல் 18 ஊசிகள் வரை போட வேண்டும். இதில் ஓர் ஊசி மருந்து விலை மட்டும் ரூ.300 எனக் கூறப்படுகிறது.

மேலும், மதுரை புறநகர்ப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடிக்கு உரிய மருந்து இருந்தும் அங்கு கிராம மக்கள் செல்வதில்லை.

பாம்பு கடித்து இறந்தோருக்கு அரசு சார்பில் முன்பு நிதி உதவி அளிக்கப்பட்டுவந்தது. ஆனால், அவ்வாறு எந்த நிதியும் இப்போது அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

பாம்பு கடிக்கு ஆளானோர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தாலும் அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவர்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.

கிராமங்களில் பாம்பு கடித்து இறப்போர் விகிதத்தை குறைப்பதற்கு, பாம்பு கடித்தால் மேற்கொள்ளவேண்டிய முதலுதவி மற்றும் பாம்பு கடி சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com