மதுரை, ஆக.10: மதுரை மாநகரில் 30 ரேஷன்கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்ய பயன்படுத்தப்பட்ட 272 போலி ரேஷன் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆட்சியர் சி.காமராஜ் உத்தரவின்பேரில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அனைத்துக் கடைகளிலும் மீண்டும் 100 சதவீத ஆய்வை மேற்கொள்ளவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. மாநகரில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு முறையாக ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டனர்.
மேலும், புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்தபோது, போலி முகவரியுடன் ஏராளமான விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்படி மாநகரில் உள்ள 124 கடைகளில் ரேஷன் அட்டைகளை முழுமையாக ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டது. அந்தக் கடைகளில் பல கட்டங்களாகச் சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முதல்கட்டமாக, மாநகரில் உள்ள 30 கடைகளில் கடந்த ஒருவாரமாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீடு, முகவரி என எதுவும் இல்லாத நிலையில் பலரது பெயரில் ரேஷன் கார்டுகள் இருப்பது தெரியவந்தது.
ஆள்களே இல்லாத நிலையில், போலியான ரேஷன் கார்டுகளை வைத்து பொருள்களை விநியோகம் செய்ததாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற ரேஷன் கார்டுகளுக்கான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களையே வெளிமாநிலங்களுக்கு திருட்டுத்தனமாக கடத்திவருவதும் தெரியவந்தது.
மேலும், ரேஷன் கார்டுகளில் உள்ள பெரியவர்களுக்கு 1 யூனிட் என்ற அளவில் பொருள்களும், 12 வயதுக்கு உள்பட்ட சிறியவர்களுக்கு அரை யூனிட் என்ற அளவிலும் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
அதன்படி, போலியான பெயர்களில் இதுவரை 110 யூனிட் பொருள்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது.
இதையடுத்து, போலி ரேஷன் கார்டுகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் பொருள்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து ஆட்சியர் சி.காமராஜிடம் கேட்டபோது, அரசின் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொருள்கள் மக்களுக்கு சரியான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உண்மையான பயனாளிகள் பயனடைய வேண்டும் எனும் நோக்கத்தில், போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாதந்தோறும் இனி அனைத்து ரேஷன் கடைகளும் முழு ஆய்வு செய்யப்பட்டு போலி ரேஷன் கார்டுகள் அடியோடு ஒழிக்கப்படும் என்றார்.
மாவட்டத்தில் ஏற்கெனவே சரியான முகவரி மற்றும் ஆள்கள் விவரம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 1.20 லட்சம் ரேஷன் கார்டுகள் போலியானவையா? என அதிகாரிகள் விசாரித்து, அவற்றுக்கான பொருள்கள் விநியோகத்தையும் நிறுத்தி வைத்ருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.