பி.எட். கலந்தாய்வில் பாரபட்சம்: தமிழ் படித்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு

மதுரை, ஆக. 26 : தமிழ் பி.லிட். படித்துவிட்டு ஆசிரியர் பணிக்கான பி.எட். படிப்புக்கு விண்ணப்பித்த மதுரை செந்தமிழ்க் கல்லூரி மாணவர்களை துணைமைப் பாட மதிப்பெண் இல்லை எனக் கூறி கலந்தாய்வில் அனுமதிக்க அதிகார
Updated on
2 min read

மதுரை, ஆக. 26 : தமிழ் பி.லிட். படித்துவிட்டு ஆசிரியர் பணிக்கான பி.எட். படிப்புக்கு விண்ணப்பித்த மதுரை செந்தமிழ்க் கல்லூரி மாணவர்களை துணைமைப் பாட மதிப்பெண் இல்லை எனக் கூறி கலந்தாய்வில் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் கடந்த 20 ஆண்டுகளாக பி.லிட். 3 ஆண்டு தமிழ் பட்டயப் படிப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம்.

செமஸ்டருக்கு 5 பாடங்கள் என, 3 ஆண்டுகளில் 6 செமஸ்டர்களுக்கு தமிழ் இலக்கியம், இலக்கணம் உள்ளிட்ட 30 பாடங்களை பி.லிட். மாணவர்கள் கற்றுவருகின்றனர். இதேபோல பி.லிட். பாடப் பிரிவு காரைக்குடி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பி.லிட். படித்த மாணவர்கள் பி.ஏ. படித்தவர்களைப் போல மேல்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது பி.எட். மற்றும் எம்.ஏ. (தமிழ்), பி.எல். உள்ளிட்டவற்றுக்கும் விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் உள்ளது.

பி.ஏ. படிப்போருக்கு துணைமைப் பாடமாக (பகுதி 1, பகுதி 2) ஆங்கிலம் மற்றும் பொதுத் தமிழ் இடம் பெற்றிருக்கும். ஆனால், பி.லிட். படிப்பவர்களுக்கு இதுபோன்ற பாடங்கள் இராது. முதன்மைப் பாடமான தமிழ் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.

பி.லிட். தமிழ் படித்தோருக்கு பி.எட். தேர்வின் போது 20% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என கடந்த முறை திமுக ஆட்சியின்போது வாய்மொழியாகக் கூறப்பட்டதாக தமிழ் படித்த மாணவர்கள் கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பி.எட். ஆசிரியர் படிப்புக்காக விண்ணப்பித்த பி.லிட். மாணவர்கள், முறைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு தேர்வு பெற்றும் வந்தனர்.

அண்மையில் சென்னையில் கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில் நடைபெற்ற பி.எட். படிப்புக்கான கலந்தாய்வுக்கு, மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பி.லிட் படித்த 19 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களில் 8 பேருக்கு கலந்தாய்வுக்கு வருமாறு இணையதளத்தில் விவரம் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களில் 3 பார்வையற்ற மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரும் சென்னைக்குச் சென்றனர்.

கடந்த 24-ம் தேதி சென்னை லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற பி.எட். கலந்தாய்விலும் செந்தமிழ்க் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகள், செந்தமிழ்க் கல்லூரி மாணவர்கள் பி.எட். தேர்வு கலந்தாய்வு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தபோது, பி.ஏ. மாணவர்களைப் போல துணைமைப் பாடங்களின் மதிப்பெண்ணை குறிப்பிடாததால், தேர்வுக்கு அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளனர்.

ஆனால், செந்தமிழ்க் கல்லூரியில் பி.லிட். மாணவர்களுக்கு துணைமைப் பாடம் இல்லை எனவும், இதனால் மதிப்பெண்ணை அதற்குரிய கட்டத்தில் பூர்த்தி செய்ய இயலவில்லை எனவும் மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.

கடந்த ஆண்டில் இதே பி.லிட். மாணவர்களுக்கு துணைமைப் பாட மதிப்பெண் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பி.எட்.டுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதையும் மாணவர்கள் சுட்டிக்காட்டினர். ஆனால், பி.எட். தேர்வுக் குழுவினர் அதை ஏற்காமல், கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கமாட்டோம் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பி.லிட். மாணவர்கள் ஏமாற்றத்துடன் மதுரை திரும்பினர்.

இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்களில் பி.லிட்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவரும் அடங்கியுள்ளார்.

இதுகுறித்து செந்தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் க.சின்னப்பாவிடம் கேட்டபோது, கலையியல் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு செயல்முறைப் பயிற்சி எப்படி இருக்கும்? ஆகவே பி.லிட். படித்தோரிடம் செய்முறை பயிற்சி மதிப்பெண் கேட்பது நியாயமல்ல என்றார்.

இப்பிரச்னை குறித்து சட்டரீதியாக அணுகப்போவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறினர். அதிலும் குறிப்பாக தமிழ் படித்து அதன் மூலம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள நினைத்து பி.எட்.டுக்கு விண்ணப்பித்த பார்வைக் குறைபாடுள்ள பெண் உள்ளிட்ட 3 பேரும் தற்போது அதிர்ச்சியில் இருப்பதை அறியமுடிந்தது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பல திட்டங்களைச் செயல்படுத்துவதாகவும், தமிழ் வழியில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை என்றெல்லாம் அறிவிக்கும் தமிழக அரசானது, நான்காம் தமிழ்ச் சங்க வளாகத்தில் இயங்கும் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பி.லிட். படித்தோருக்கு பி.எட். படிப்பின் கலந்தாய்வில் கூட அனுமதி இல்லை என்று கூறுவது என்ன நியாயம் என்பதே அனைவரது கேள்வியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com