அழிந்துவரும் தோல் பாவைக் கூத்துக் கலை: அரசு உதவி கிடைக்காமல் வறுமையில் வாடும் கலைஞர்கள்

தேனி, டிச. 7:÷தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி அருகே உள்ள ஸ்ரீராம்நகர் பகுதியில் வறுமையில் வாடும் தோல் பாவைக் கூத்துக் கலைஞர்கள், அரசின் உதவி கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். ÷கெங்குவார்பட்டி அருகே
Updated on
2 min read

தேனி, டிச. 7:÷தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி அருகே உள்ள ஸ்ரீராம்நகர் பகுதியில் வறுமையில் வாடும் தோல் பாவைக் கூத்துக் கலைஞர்கள், அரசின் உதவி கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.

÷கெங்குவார்பட்டி அருகே உள்ள ஸ்ரீராம்நகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமணராவ்(63). தோல் பாவைக் கூத்துக் கலைஞர். வசிப்பதற்கு ஒரு வீடு இல்லாத நிலையில், 11 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினருடன், கெங்குவார்பட்டி-காட்ரோடு ஸ்ரீராம்நகர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்துக் குடியிருந்து வருகிறார்.

÷தோல் பாவைக் கூத்தை தனது பாட்டனார் காலத்துக்கு முன்பிருந்து குடும்பத் தொழிலாகச் செய்து வருவதாகக் கூறுகிறார். பழமையான இக்கலைக்கு தற்போது போதிய வரவேற்புக் கிடைப்பதில்லை எனவும், கலைஞர்கள் வறுமையில் வாடுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:÷எங்களது பூர்வீகம் மகாராஷ்டிரம். அங்கிருந்து எனது பாட்டனார் லட்சுமணராவ் காலத்தில் தஞ்சைக்கும், பின்பு தேனி மாவட்டத்துக்கும் குடிபெயர்ந்தோம்.

÷தற்போது தேனி மாவட்டத்தில் எங்களது குடும்பத்தினர் மட்டுமே இந்த தொழில் செய்து வருகிறோம். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம். தமிழக அரசு 2003-ம் ஆண்டு எனக்கு கலை வித்தகர் விருதும், 2004-ம் ஆண்டு கலை சுடர் மணி விருதும் வழங்கியுள்ளது.

÷தற்போது ஆண்டுக்கு ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வப்போது பள்ளி, கல்லூரிகளில் அனுமதி பெற்று நிகழ்ச்சி நடத்தி மாணவ, மாணவிகள் அளிக்கும் வெகுமதியைப் பெற்று பிழைப்பு நடத்துகிறோம். சில இடங்களில் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க எங்களை அழைக்கின்றனர். எனது குடும்பத்தில் மனைவி, 3 மகன்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட 11 பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

÷அரசின் தொகுப்பு வீடுகள் திட்டம், சமத்துவபுரத் திட்டம் அல்லது கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி செய்யுமாறு பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சேபனைக்குரிய அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருவதாகக் கூறி, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் சேர்க்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையில் குடிசையில் வசிக்க முடியாமல் காட்ரோடு பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் தங்கியுள்ளோம்.÷சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் நலிவுற்ற கலைஞர்களுக்கான நிதி உதவித் திட்டத்தில் எனக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 1,000 வழங்குவதற்கு 2010, ஏப்ரல் 15-ம் தேதி அரசு உத்தரவிட்டது. ஆனால் அதுவும் வழங்கப்படவில்லை. கூத்து நடத்துவதற்கான பொருள்கள் வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.

÷நலிவுற்ற நிலையில் சிரமப்பட்டு வரும் எனது குடும்பத்தினருக்கு உதவ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

÷சுதந்திர போராட்டக் காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த தோல் பாவைக் கூத்துக் கலையை அழியாமல் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு சாதனை மற்றும் திட்ட விளக்க நிகழ்ச்சிகளில் தோல் பாவைக் கூத்துக் கலையை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றார் முத்துலட்சுமணராவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com