மதுரை,பிப்.6: உலகின் முதன் மொழி தமிழ் மொழி எனவும், திராவிடத் தாய்மொழி எனவும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க, தன் வாழ்நாளில் பெரும்பகுதியை தமிழ் ஆய்வுப் பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் தேவநேயப் பாவாணர்.
மதுரையில் தேவநேயப் பாவாணருக்காகக் கட்டப்பட்ட மணிமண்டபம் போதிய பராமரிப்பின்றி இருப்பதாகவும் அதை தமிழக அரசு சீரமைத்து புதுப்பிக்க வேண்டும் என்பதும் தமிழறிஞர்கள் கோரிக்கையாகும்.
மொழி ஞாயிறு என்று அழைக்கப்பட்ட பாவாணர், தமிழறிஞராக மட்டுமல்லாமல்; மிகச்சிறந்த மொழியியல் அறிஞராகவும் திகழ்ந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வடமொழி (சம்ஸ்கிருதம்), ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் உள்ளிட்டவற்றையும் இலக்கணத்தோடு அறிந்தவர்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பெரும்புத்தூர் எனும் கிராமத்தில் 7.2.1902}ல் பிறந்தார் பாவாணர். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் தேவநேசன். பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வகையில் மொழிப் புலமையில் சிறந்து விளங்கினார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி இலக்கண நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.
இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். உலகத்தமிழ் இயக்கம் என்பதை நிறுவி அதன் மூலம் உலகம் முழுவதும் தமிழ் மொழியைப் பரப்ப அரும்பாடு பட்டவர். அரசின் செந்தமிழ் அகரமுதலி திட்ட இயக்கத்திலும் இயக்குநராக அவர் பணிபுரிந்துள்ளார். இலக்கணச் செம்மல், தமிழ்ச் சொல் ஆய்வுத்துறை முன்னோடி உள்ளிட்ட 15 }க்கும் மேற்பட்ட சிறப்புப் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். தமிழ் மொழியின் தொன்மை குறித்து பல்வேறு மொழிகளில் 19}க்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார்.
இப்படி தமிழ்மொழிக்காக தன்னையே அர்ப்பணித்த பாவாணர், தனது 80}வது வயதில், அதாவது 16}01}1981}ல் மரணமடைந்தார். அவரது மொழிப் பற்றை நினைவுகூரும் வகையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் விரும்பினர்.
இதையடுத்து மதுரை ஆவின் அருகே சுமார் 0.19. ஹெக்டேர் பரப்பளவில் ரூ.39.60 லட்சம் செலவில் அவருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டது.
பாவாணரின் சிலை, அவரது அரிய புகைப்படங்கள் என அமைந்துள்ள இந்த மணி மண்டபத்தை 30.10.2007 அன்று தமிழக முதல்வர் கருணாநிதி திறந்துவைத்துள்ளார்.
இதை பராமரிக்கும் பொறுப்பு செய்தி மக்கள் தொடர்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பாவாணரின் மகன் வழிப் பேத்தியான பரிபூரணம் அரசு ஊழியராக நியமிக்கப்பட்டு மண்டபத்தையும் பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது மணிமண்டபத்தைச் சுற்றிய பகுதிகள் தற்போது புதர்மண்டிய நிலையில் உள்ளன. பாவாணரின் பெயர்ப் பலகையில் உள்ள பல எழுத்துகள் சேதமடைந்து காணப்படுகின்றன. மண்டபத்தின் முகப்பில் பொருத்தப்பட்ட மின்விளக்குகளும் சேதமடைந்து காணப்படுகிறது.
இங்கு காவலர் இல்லாததால் இரவில் இந்த இடம் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் இருந்து வருகிறது. குடிநீர் வசதி இங்கு இல்லை.
"யானை வாங்க காசு இருந்தது; ஆனால் அங்குசம் வாங்க காசு இல்லை' என்பது போல பல லட்சம் ரூபாய் செலவில் மண்டபத்தை அமைத்த அரசு, அதை பராமரிக்கப் போதிய நடவடிக்கை எடுக்கவில்லையே என்பது தமிழறிஞர்களது ஆதங்கமாகும். சென்னையில் பாவாணர் அரங்கம் நூலகமாக உள்ள நிலையில் மதுரை பாவாணர் மணிமண்டபத்தில் அவரது நூல்களை வைத்து பார்வையாளர்கள் படிக்க வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதையும் தமிழறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், பாவாணர் பயன்படுத்திய பேனா, கண்ணாடி உள்ளிட்ட பொருள்களையும் உறவினர்களிடம் இருந்து பெற்று, மணிமண்டபத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோருகின்றனர்.
கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ள நிலையில் மதுரையில் உள்ள பாவாணர் மணிமண்டபத்தை, புதுப்பித்து பராமரித்து வருங்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ளத்தக்க வகையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோள்.
பாவாணர் மணி மண்டபத்தைச் சுற்றி உள்ள இடத்தில் ஒரு அரங்கம் அமைத்து இலக்கிய அமைப்புகளுக்கு நிகழ்ச்சிகள் நடத்த குறைந்த வாடகையில் அரசு தந்தால் என்ன என்கிற கோரிக்கையையும் வைக்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.