மதுரை, ஜூலை 1: தமிழகத்தில் கோயில்கள், தேவாலயம், பள்ளிவாசல்களுக்கு நிரந்தர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதையடுத்து, மதுரையில் முக்கிய கோயில்கள் மற்றும் மக்கள் அதிகம் புழங்கும் இடங்களின் மாதிரி வரைபடத்தை போலீஸôர் சேகரித்து வருகின்றனர்.
உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக, உளவுத்துறை அளித்த எச்சரிக்கையை அடுத்து கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு, இப்போது மாநகர் உதவி போலீஸ் கமிஷனர் வெள்ளைத்துரை மேற்பார்வையில், 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 120 போலீஸôர் ஆகியோர் 3 ஷிப்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களைத் தவிர, கோயில் பாதுகாப்புப் படை உள்ளிட்ட பிரிவினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோயிலின் நான்கு கோபுரங்களிலும் மெட்டல் டிடெக்டர் சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் திட்டத்தின்படி, கோயிலுக்குள் உள்ள மெட்டல் டிடெக்டர் சாதனத்தை கோபுர நுழைவுப் பகுதியில் வெளியில் அமைக்கவும் திட்டமிடப்பட்டு பரிந்துரை செய்துள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் கூறினர். மேலும், ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்த போலீஸôரையும், அதிரடிப் படையினரையும் கோயில் வாயிலில் தயாராக நிறுத்தும் திட்டத்தையும் விரைவில் செயல்படுத்த உள்ளதாகவும், போலீஸ் அதிகாரிகள் கூறினர். நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள மக்கள் அதிகம் கூடும் கோயில்களும் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் எத்தனை நுழைவுவாயில்கள் உள்ளன, பக்தர்கள் வெளியேறும் வாயில்களின் அமைப்பு, கோயில்களில் உள்ள சன்னதிகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களையும், அந்தந்த கோயில்கள் அடங்கிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று சேகரித்து வருகின்றனர். நகரில், செல்லூர் திருவாப்புடையார், கூடலழகர் பெருமாள், தல்லாகுளம் பெருமாள் ஆகிய கோயில்களுக்கும் சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. புறநகரில், திருப்பரங்குன்றம், அழகர்கோவில், திருமோகூர், திருவாதவூர் உள்ளிட்ட கோயில்களுக்கும் நிரந்தரக் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இது தவிர, மதுரையில் தூய மரியன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களும் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றுக்கும் நிரந்தரப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், போலீஸôர் நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வழிபாட்டுத் தலங்களைத் தவிர்த்து, மக்கள் கூடும் இடங்களாகக் கருதப்படும் பஸ் நிலையப் பகுதிகள், ரயில் நிலையப் பகுதிகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றின் வரைபடத்துடன், அவற்றின் அமைப்பு, வாயில்கள் விவரத்தையும் போலீஸôர் சேகரித்து வருகின்றனர். சிறப்புப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மக்கள் கூடும் கோயில்கள் அனைத்திலும் மெட்டல் டிடெக்டர், கண்காணிப்பு காமிராக்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும். தனியார் நிறுவனங்களில் இந்த வசதியை அமைக்க அறிவுறுத்தப்படும் எனவும், போலீஸ் உயரதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து, மதுரை மாநகர் போலீஸ் நகர் உதவிக் கமிஷனர் வெள்ளத்துரையிடம் கேட்டபோது, புதிய திட்டத்துக்கான பரிந்துரைகள், கோயில் வரைபடம் உள்ளிட்டவற்றை சேகரித்து அனுப்பியுள்ளோம் என்றார். அநேகமாக, நவம்பரில் இந்த புதியத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, உயர் அதிகாரிகள் வட்டராங்கள் மேலும் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.