வாடகைப் பிடித்தம் செய்தும் குடியேறத் தயங்கும் அலுவலர்கள்

தேனி, ஜூலை 11: தேனி மாவட்டத்தில் விவசாய அலுவலர்கள் கிராமங்களில் தங்கிப் பணியாற்றுவதற்கு அமைக்கப்பட்ட விவசாய அலுவலர் குடியிருப்புகள் பயன்படுத்தப்படாமல் பாழடைந்து கிடக்கின்றன.  விவசாய அலுவலர்கள் கிராமங்
Updated on
1 min read

தேனி, ஜூலை 11: தேனி மாவட்டத்தில் விவசாய அலுவலர்கள் கிராமங்களில் தங்கிப் பணியாற்றுவதற்கு அமைக்கப்பட்ட விவசாய அலுவலர் குடியிருப்புகள் பயன்படுத்தப்படாமல் பாழடைந்து கிடக்கின்றன.

 விவசாய அலுவலர்கள் கிராமங்களில் தங்கிப் பணியாற்றவும், விவசாயிகள் கூட்டம் நடத்துவதற்கும், குழு அமைப்பதற்கும், களப்பணி ஆற்றவும் வாய்ப்பாக பொதுப்பணித் துறை சார்பில் 1980-ல் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் 30-க்கும் மேற்பட்ட விவசாய அலுவலர் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.

 இந்தக் குடியிருப்பில் விவசாய அலுவலர்கள் மற்றும் உதவி விவசாய அலுவலர்கள்  தங்கிப் பணியாற்றவும், குடியிருப்பிற்காக அலுவலர்களின் சம்பளத்தில் வாடகைப் பிடித்தம் செய்யவும் அரசு உத்தரவிட்டது.

 ஆனால், இக் குடியிருப்புகள் கிராமத்தை விட்டு அதிக தூரத்தில் உள்ளதாகவும், வட்டார அலுவலகத்திற்குச் சென்று வருவதற்கு போதிய பஸ் வசதி இல்லையென்றும் கூறி, பெரும்பாலோனோர் குடியிருப்பில் தங்குவதில்லை.

 பல ஆண்டுகளாக ஆள்கள் குடியேறாததாலும், பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததாலும், பெரும்பாலான குடியிருப்புகள் சிதிலமடைந்த நிலையில் பாழடைந்து காணப்படுகின்றன.

 பல்வேறு இடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குடியிருப்புக் கட்டடங்களில்,  சமூக விரோத செயல்கள் நடந்துவருவதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

 சில குடியிருப்புக் கட்டடங்களைக் கட்டி முடித்து 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகவில்லை என்பதால், அவற்றை இடித்து அப்புறப்படுத்த பொதுப்பணித் துறையினர் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

 அரசு உத்தரவின்படி, விவசாய அலுவலர் குடியிருப்புக்கு வட்டாரத் தலைமையிட அலுவலர்களின் ஊதியத்தில் குறிப்பிட்டத் தொகை வாடகைக்காக பிடித்தம்  செய்யப்பட்டு வருகிறது.

 சம்பளத்தில் வாடகைப் பிடித்தம் செய்தும், விவசாய அலுவலர்கள் குடியிருப்பில் தங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. சில இடங்களில் விவசாய அலுவலர்கள்  தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குடியிருப்பை, உள் வாடகைக்கு விட்டு வசூல் செய்து வருகின்றனர்.

 விவசாயத்துறையில் தற்போது இரண்டடுக்கு நிர்வாக முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, அனைத்து வட்டாரத்திலும் விவசாய உதவி இயக்குநர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 விவசாய உற்பத்தியை அதிகரிக்க, புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு  வருகின்றன. விவசாயிகளைக் குழுக்களாக ஒருங்கிணைத்து, பல்வேறு திட்டங்களின்கீழ்  அரசு மானிய உதவிகளை வழங்கி வருகிறது.

 இந்நிலையில், விவசாய அலுவலர்கள் கிராமங்களில் தங்கிப் பணியாற்றாததால், அரசுத் திட்டங்கள், மானிய உதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 விவசாய அலுவலர்கள் களப்பணியாற்றி உரிய ஆலோசனை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. கிராமப்புற விவசாயிகள் நகரில் உள்ள விவசாய அலுவலகங்களுக்குச் சென்று ஆலோசனை பெறத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

 இதனால், விவசாய அலுவலர்கள் கிராமங்களில் தங்கிப் பணியாற்றுவதற்கு  வாய்ப்பாக, பல லட்சம் செலவில் கட்டப்பட்டு பயன்பாடின்றி உள்ள விவசாய அலுவலர் குடியிருப்புகளை புதுப்பிப்பதற்கும், புதிய குடியிருப்புகளை அமைத்துத் தருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com