கேரளத்துக்கு அதிகரித்துவரும் அரிசி கடத்தல்

தேனி, ஜூலை 14: தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் அரிசி விநியோகம் பெறும் குடும்ப அட்டைகள் பயனாளிகளால் அடகு வைக்கப்படுவதும், குடும்ப அட்டை மூலம் பெறப்படும் அரிசியை, கேரள மாநிலத்துக்குக் கடத்துவதும
Updated on
2 min read

தேனி, ஜூலை 14: தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் அரிசி விநியோகம் பெறும் குடும்ப அட்டைகள் பயனாளிகளால் அடகு வைக்கப்படுவதும், குடும்ப அட்டை மூலம் பெறப்படும் அரிசியை, கேரள மாநிலத்துக்குக் கடத்துவதும் அதிகரித்து வருகிறது.

 மாவட்டத்தில் 100 சதவீத போலி குடும்ப அட்டைச் சோதனையில் 20 ஆயிரத்து  405 குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டு, தற்போது 3 லட்சத்து 75 ஆயிரத்து 171 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன.

 இவற்றில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 546 குடும்ப அட்டைகள் அரிசி விநியோகம்  பெறுகின்றன. நியாயவிலைக் கடைகள் மூலம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 80 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா 20 கிலோ அரிசி விநியோகம்  செய்யப்படுகிறது.

 கிராமப் பகுதிகளில் பெரும்பாலான பயனாளிகள் ரேஷன் அரிசியை பயன்படுத்துகின்றனர். ஆனால், நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கிப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ரேஷன் அரிசியை பெறுவதற்கு வருமான வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இல்லாததால், பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள் அரிசியை வாங்குபவர்களாக உள்ளனர்.

 இதில் பலர் மாதம் ரூ. 50 முதல் ரூ. 70 வரை பெற்றுக் கொண்டும், ஆண்டு அடமானமாக ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு வியாபாரிகளிடம் ரேஷன் கார்டுகளை அளித்து விடுவதாகவும், அரிசி விநியோக அட்டைகளை அளித்துவிட்டு அதற்கு மாற்றாக மண்ணெண்ணெய், சர்க்கரையை பெற்றுக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

 குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெறும் வியாபாரிகள், நியாயவிலைக் கடை பணியாளர்கள் சிலரின் உதவியுடன் தங்கள் வசமுள்ள குடும்ப அட்டைகளுக்கான அரிசியை மொத்தமாகவும், அதிகாரிகள் சோதனையிடும் காலங்களில் தனித் தனியாக குடும்ப அட்டைகளைக் காட்டியும் வாங்கி பதுக்கி வைத்துக் கொள்வதாகப் புகார்  எழுந்துள்ளது. இவ்வாறு பதுக்கப்படும் அரிசி, பஸ்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் மூலம் போடிமெட்டு, கம்பம்மெட்டு, கூடலூர் ஆகிய பகுதிகளின் வழியாகக்  கேரளத்துக்குக் கடத்தப்பட்டு அங்கு கிலோ ரூ.10 முதல் ரூ.13 வரை விற்கப்படுவதாகவும், கால்நடைத் தீவனத்தில் கலப்படம் செய்வதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 பயனற்ற சோதனைச் சாவடி: போடிமெட்டு, கம்பம்மெட்டு, லோயர்கேம்ப் ஆகிய இடங்களில் உள்ள தமிழக எல்லையோர சோதனைச் சாவடிகளில் போதிய பணியாளர்களை நியமிக்காததால், பெயரளவிற்கு மட்டும் இவை செயல்பட்டு வருகின்றன.

 இதனைப் பயன்படுத்தி கேரளத்திற்கு அரிசி கடத்துவது அதிகரித்துவிட்டது. அவ்வப்போது கார், வேன், ஜீப் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தி சாவடிகளில் சோதனை செய்வதால், தனியார் மற்றும் அரசு பஸ்களில் அரிசியை சிப்பமாகக்  கட்டி வைத்தும், இரண்டு சக்கர வாகனங்கள் மூலமும் கடத்திச் செல்வதாகக் கூறப்படுகிறது.

 வியாபாரியாகும் பணியாளர்கள்: அரிசி கடத்துவோர் எல்லையோர சோதனைச் சாவடி வழியாக பஸ்களிலும், இரண்டு சக்கர வாகனங்களிலும் கேரளத்திற்கு அரிசி கடத்திச் செல்வதற்கு தினக்கூலி மற்றும், நடை எண்ணிக்கை கணக்கில் பணியாளர்களை நியமித்துக்கொள்வதாகவும், பெண்கள் அதிக அளவில் இந்தப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நியாய விலைக் கடை அரிசியை கொள்முதல் செய்து, கடத்தி விற்பதற்கு குறைந்த அளவு முதலீடே போதுமானது என்பதாலும், அதிக லாபம் கிடைப்பதாலும், சில மாதங்கள் வரை அரிசிக் கடத்தல் பணியில் ஈடுபட்டவர்கள்,பின்னர் வியாபாரிகளாக மாறிவிடுகின்றனராம்.

 வருவாய்த்துறையினர், பொது விநியோகத் திட்ட அலுவலர்கள், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôர் நடத்தும் சோதனையில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக கேரளத்திற்கு கடத்திச் செல்லப்படும் 20 டன் ரேஷன் அரிசி பிடிபடுகிறது.

  கடந்த மூன்று மாதங்களில் மட்டும் அரிசிக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 இருப்பினும், கேரளத்திற்கு அரிசி கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 ரேஷன் கடைகளில் ஏழை மக்களுக்காக கிலோ ரூ. 1-க்கு அரிசியை தமிழக அரசு  வழங்கி வருகிறது.

 இந்த அரிசியை கேரளத்துக்குக் கடத்துவதைத் தடுக்க எல்லையோர சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். குடும்ப அட்டைகளை அடகு பெற்றுக் கொண்டு அரிசிக் கடத்தல் தொழிலில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மேலும் நியாயவிலைக் கடைகளில் ரேஷன் அரிசி விநியோகத்தை தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com