மாணவியர் விடுதி கழிப்பறையில் கதவுகள் இல்லாத அவல நிலை

மதுரை, ஜூலை 29: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் விடுதியின் பல அறைகள் இடியும் நிலையில் உள்ளன. மேலும் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதுடன், மாணவியர் விடுதி கழிப்பறையில் கதவுகள் இல்லாத அ
Updated on
2 min read

மதுரை, ஜூலை 29: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் விடுதியின் பல அறைகள் இடியும் நிலையில் உள்ளன. மேலும் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதுடன், மாணவியர் விடுதி கழிப்பறையில் கதவுகள் இல்லாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

 மதுரை அரசு மருத்துவக்கல்லூரி கடந்த 1954-ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது முதலாண்டுக்கான சேர்க்கையாக 155 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 2 ஆம் ஆண்டு முதல் 5 ஆம் ஆண்டுகள் வரையில் 775 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

 இவர்களில் விடுதியில் 312 மாணவர்களும், 370 மாணவியரும் சேர்ந்துள்ளனர். முதலாண்டு மாணவர்களில் 50 மாணவரும், 70 -க்கும் மேற்பட்ட மாணவியரும் விடுதியில் சேர்க்கப்படுவர் என கூறப்படுகிறது.

 மாணவர்களுக்கு தனியாகவும், மாணவியருக்கு தனியாகவும் இரு விடுதிகள் கல்லூரி வளாகத்தினுள் உள்ளன. இந்த விடுதிகள் கட்டி சுமார் 55 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

 மாணவர் விடுதிகளில் 402 அறைகள் உள்ள நிலையில் அவற்றில் தங்கும் வகையில் மட்டும் 312 அறைகளே இருக்கின்றன. இந்த அறைகளிலும் தற்போது 25 அறைகள் மாணவர்கள் தங்குவதற்கு முடியாத நிலையில் மேல்கூரை இடிந்த நிலையில் சேதமடைந்து காணப்படுகின்றன.

 அறைகளில் 2 மாணவர்கள் தங்குவதற்கு ஏற்ப வசதியே உள்ளது. அறை பற்றாக்குறையால் தற்போது 4 மாணவர்களை ஒரே அறையில் தங்கவைக்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

 மாணவர்களுக்கான கழிப்பறைகள் 4 பிளாக்குகளாக 50 க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் உள்ளன. ஆனால், அவற்றில் 20-க்கும் மேற்பட்டவை பயன்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளன.

 தினமும் விடுதிக்கு 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் இப்போது 15 ஆயிரம் லிட்டர் தண்ணீரே மாநகராட்சி மூலம் பெறப்படுகிறது. விடுதிக்கு தேவையான தண்ணீரைப் பெற 2 ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த இரண்டுமே தற்போது தூர்ந்துபோய் பயனற்று உள்ளன.

 விடுதிக்கான திறந்த நிலைக்கிணற்றின் மூலமே மாணவர்கள் கழிப்பறை உள்ளிட்டவற்றில் பயன்படுத்தவேண்டிய நீர் பெறப்படுவதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அதேபோல மாணவர்களுக்கான குடிநீர் வசதிக்கு தினமும் ஒன்றரை லட்சம் லிட்டர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது வெறும் 20 ஆயிரம் லிட்டர் குடிநீரே மாநகராட்சி மூலம் பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 மாணவியர் விடுதியிலும் இதே நிலைதான் நீடிப்பதாக விடுதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாணவியர் விடுதியில் பல கழிப்பறைகளுக்கு கதவுகளே இல்லாத நிலையும் காணப்படுகிறது. இதனால், கதவுக்குப் பதிலாக துணிகளைத் தொங்கவிட்டுள்ள அவலநிலை ஏற்பட்டுள்ளது.

 இதற்கிடையே இந்த அவல நிலை குறித்து சுகாதாரத்துறைக்கு பல முறை மருத்துவமனை நிர்வாகம் கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.

 ஆனால், கல்லூரி சீரமைப்புக்கு ரூ.20 லட்சம் சிறப்பு நிதி அளிக்கப்பட்டிருப்பதாக கட்டட பராமரிப்பு பொதுப்பணித்துறை பிரிவினர் தெரிவித்து பல மாதங்களாகியும் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்றும் மாணவியர் கூறுகின்றனர்.

 இதேபோலவே மருத்துவக் கல்லூரி முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான விடுதியிலும் அறைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்கு 204 அறைகளே உள்ளன. ஆனால், இப்போது புதிதாக பட்டமேற்படிப்பு மாணவர்கள் இடமானது கூடுதலாக்கப்பட்டுள்ளது. அதன்படி 524 மாணவர்கள் கல்வி பயிலும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

 மாணவர்கள் எண்ணிக்கையை கூடுதலாக்கிவிட்டு அவர்கள் தங்குவதற்கு விடுதி வசதி இல்லாத காரணத்தால் பெரும்பாலான மாணவர்கள் தனியார் விடுதிகளில் தங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 ஆகவே, கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறும் அரசானது மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவியர் விடுதியில் ஏற்பட்டுள்ள அவல நிலையை போக்க அவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்பதே மாணவர், பெற்றோர் ஆகியோரின் ஒட்டுமொத்த கருத்தாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com