மதுரை, ஜூன் 10: மதுரையில் கடந்த 5 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ. 1 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளில் மொத்தம் 49 பேர் உயிரழந்துள்ளனர்.
மதுரை நகரில் கடந்த ஜனவரி முதல் மே வரையில் நடந்த சாலை விபத்துகள் குறித்து போலீஸôர் ஆய்வு நடத்தி உள்ளனர்.
இதில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதிக விபத்துகள் நடந்திருப்பதும், அதிகமானோர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி ஏப்ரலில் நடந்த சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மே மாதத்தில் மோட்டார் சைக்கிள் 46, லாரிகள் 8, அரசு பஸ்கள் 4 என விபத்துகள் நடந்துள்ளன. மே மாதத்தில் சாலை விபத்துகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 3, கார் விபத்தில் 5, லாரி விபத்தில் 2, அரசு பஸ் விபத்தில் 2 என இறப்பு விகிதம் உள்ளது.
கடந்த ஜனவரி முதல் மே வரையில் நகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக லாரி, மோட்டார் சைக்கிள், மினி லாரிகள், கார், பஸ்கள் என அனைத்து வாகனங்கள் மீதும் 90 ஆயிரத்து 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து விதிமீறிய டிரைசைக்கிள், ஆட்டோக்கள் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி 5 மாதங்களில் 1 லட்சம் வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை நகரில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 5 மாதங்களில் ரூ.96 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக, மாநகர் போக்குவரத்து உதவி கமிஷனர் மகுடபதி தெரிவித்தார்.
கடந்த 5 மாதங்களில் நடந்த விபத்துகளில் 185 பேர் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.
இதில் லாரிகள் மூலம் 35 விபத்துகள் நடந்துள்ளன. மாநகரில் அழகர்கோவில் சாலை, திருப்பரங்குன்றம் சாலை ஆகியவற்றில் அதிக விபத்துகள் நடந்திருப்பதும், அதற்கு அடுத்ததாக பைபாஸ் சாலை, காமராஜர் சாலை ஆகியவற்றில் விபத்துகள் அதிகம் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
ஆட்டோக்கள் விதிமீறல்: மதுரையில் கடந்த ஜனவரி முதல் மே வரையில் போக்குவரத்து விதிமீறியதாக பயணிகள் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டீசல் ஆட்டோ என அனைத்து வகை ஆட்டோக்கள் மீதும் 47 ஆயிரத்து 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.39 லட்சத்து 81 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல் மற்றும் சரியான ஆவணங்கள் இல்லாத 18,125 ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை 212 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிக்கு குழந்தைகளை அதிகமாக ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
கமிஷனர் பேட்டி: மதுரை நகரில் போக்குவரத்தை சீராக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் 25 போலீஸôர் நிறுத்தப்பட உள்ளதாகவும் மாநகர் போலீஸ் கமிஷனர் பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
மேலும், நகரில் முக்கிய சாலைகளில் ஒருபக்க பார்க்கிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்துவோருக்கு அதிக அபராதம் விதிக்கப்படும். போலீஸôரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைத்தாலே போக்குவரத்து முழுமையாகச் சீராகும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.