மதுரை அரசு ​ மருத்துவமனையில் பிறப்பு,​​ இறப்பு சான்று பெறுவதில் காலதாமதம்

மதுரை, ஜூன் 28: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியர் உள்ளிட்ட ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக பிறப்பு, இறப்பு சான்று பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு ரா
Updated on
2 min read

மதுரை, ஜூன் 28: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியர் உள்ளிட்ட ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக பிறப்பு, இறப்பு சான்று பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் குறைந்தது 50 குழந்தைகள் பிறக்கின்றன. அதேபோல இறப்போர் எண்ணிக்கையும் 40-க்கும் மேலாக உள்ளது.

இந் நிலையில், மருத்துவமனையில் பிறக்கும் குழந்தை மற்றும் இறப்போருக்கான சான்றிதழ்களை முன்பு மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் வசதி இருந்தது. இந்த முறையால் பொதுமக்கள் மருத்துவமனைக்கும், மாநகராட்சி அலுவலகத்துக்கும் அலையும் நிலை உள்ளதாகவும், காலதாமதம் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அரசு மருத்துவமனைக்குள்ளேயே தனி அலுவலகம் அமைத்து பிறப்பு, இறப்புச் சான்றிதழைப் பதிவு செய்து சம்பந்தப்பட்டோருக்கு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்தப் புதிய முறையின்படி மதுரை அரசு மருத்துவமனையில் பெண்களுக்கான மகப்பேறு சிகிச்சை வெளிநோயாளிகள் பரிசோதனை வார்டு அருகே சான்று பதிந்து வழங்கும் பிரிவு செயல்படத் தொடங்கியது.

அதன்படி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் தந்தை, தாய் பெயர், முகவரி, உள்ளிட்ட விவரங்களை வார்டு செவிலியர்கள் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அங்குள்ள அலுவலர் அதை சரிபார்த்து இலவசமாகவே சான்றிதழ் வழங்குவார். குறிப்பிட்ட குழந்தையின் பிறப்பு விவரம் பதிவான 24 மணி நேரத்தில் கட்டணமின்றி பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்பதே விதிமுறையாக உள்ளது.

அதுபோலவே தற்கொலை, விபத்து, பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட சான்றுகள் மருத்துவமனையின் ஆவணப் பராமரிப்புப் பிரிவுக்கு அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டணம் செலுத்தியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சான்றும் ஒரு வாரத்தில் வழங்கப்படவேண்டும்.

தற்போது மருத்துவமனையில் பிறப்புச் சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. அதாவது 6 மாதம் ஆவதாகவும் கூறப்படுகிறது.

குழந்தை பிறந்ததும் வார்டில் உள்ள செவிலியர் அதை வார்டு பதிவு நோட்டில் குறித்துக் கொள்வார். இவ்வாறு குறிக்கும்போது குழந்தையின் தாய், தந்தை பெயர், முகவரி என அனைத்தையும் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், 75 சதவிகித குழந்தைகளது பெற்றோர் முகவரி உள்ளிட்ட விவரங்கள் செவிலியர்களால் சரியாகப் பதிவு செய்யப்படாத நிலை உள்ளது.

இதனால் சான்று வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் தேதி, நேரம் ஆகியவற்றையும் கூட செவிலியர்கள் சரியாகப் பதியாமல் இருப்பதால் குழந்தை பிறப்புச்சான்று பதிவதற்கு ஒருமுறைக்கு நான்கு முறையாக வார்டுக்கும், சான்று வழங்கும் பிரிவுக்குமாகத் தகவல் பரிமாற்றம் செய்யும் நிலை ஏற்படுகிறது.

செவிலியர் பதிவை அடிப்படையாக வைத்து சான்று வழங்கப்பட்டாலும், அதில் சுமார் 60 சதவிகிதக் குழந்தைகளது பெற்றோர் தந்தை, தாய் பெயர் மாறியிருப்பதாகப் புகார்கள் தெரிவிக்கின்றனர்.

புகார் தெரிவிக்கும் பெற்றோரை, உண்மையான பெயரைக் குறிப்பிட்டு சான்று வாங்க கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், தாசில்தார் ஆகியோரிடம் அனுப்பும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அதிகாரிகளிடம் சான்று பெற்று பின்னர் மருத்துவமனையில் அளித்தாலும், அதை சரிபார்த்து திருத்தி பிறப்புச் சான்று பிரிவுக்கு அனுப்பவும் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் கிராமத்துப் பெண்கள் பலரும் தங்களது குழந்தைகளது பிறப்பை பதிவு செய்யவும், சான்று பெறவும் கைக்குழந்தையுடன் அலையும் அவலநிலையும் ஏற்படுகிறது.

ஆக, வார்டில் செவிலியர்கள் கவனக்குறைவால் பிறப்புச்சான்று வழங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்து மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவு தலைமை பேராசிரியரிடம் பலமுறை எடுத்துக்கூறியும் தீர்வு எட்டப்படவில்லை என்கிறார்கள் சான்றிதழ் பிரிவு ஊழியர்கள். மருத்துவமனை ஊழியர்கள் செய்யும் காலதாமதத்தை கருத்தில் கொள்ளாமல் சான்று பெறவருவோரிடமும் காலதாமதமாக சான்று பெற வந்ததாக அபராதக் கட்டணம் வசூலிப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பிறப்பு, இறப்பு சான்று பெறும் பிரிவு அமைந்திருக்கும் பகுதி சுகாதாரமற்று இருப்பதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். பிறப்பு, இறப்பு சான்று பெறுவதற்கு புரோக்கர் பலர் பணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சான்று பதிவாளர் வி.சண்முகத்திடம் கேட்டபோது, வார்டில் குழந்தை பிறப்பை பதிவு செய்யும்போது பொதுமக்கள் சரியான முகவரியை அளித்து, அதை சம்பந்தப்பட்ட பணியாளர்களும் பதிந்து எங்களிடம் அளித்தால் சான்றை உடனடியாக வழங்கிவிடுகிறோம். ஆனால், வார்டில் இருந்து வரும் விவரங்களில் தேதிகூட சரியாக இல்லாமல் இருப்பதாலே நாங்கள் அதைச் சரிபார்த்து சான்று வழங்கும் நிலை ஏற்படுகிறது என்றார்.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ்.எம்.சிவகுமாரிடம் கேட்டபோது, பிரவத்துக்கு வரும் பெண் கணவர் முகவரியைத் தராமல், தாய் வீட்டு முகவரியைத் தருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால்தான் முகவரி மாற்றத்தால் காலதாமதம் ஏற்படுகிறது என்றார்.

நிர்வாக ரீதியில் கணினி மயமாக்கப்படுவதாக அரசு கூறினாலும், சாதாரண பிறப்பு, இறப்புச் சான்றுக்காக பொதுமக்கள் பல மாதங்களாக அலையும் அவலநிலையை சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் கவனத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களது எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com