தேனி, மார்ச் 29: தேனி மாவட்டத்திலிருந்து கேரளப் பகுதிகளுக்கு ரேஷன் பொருள்கள், எரிசாராயம் கடத்திச் செல்லப்படுவதைத் தடுக்க, மாநில எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி மாவட்டத்தில் கேரள எல்லையோரப் பகுதிகளான போடிமெட்டு, குமுளியில் உள்ள தமிழகப் பகுதி, கம்பம்மெட்டு ஆகிய இடங்களில் தமிழக அரசின் வனத் துறை, வணிக வரித் துறை, காவல் துறை, வட்டார போக்குவரத்துத் துறை, வருவாய்த் துறை சோதனைச் சாவடிகள் உள்ளன. பணியாளர் பற்றாக்குறையால் பெயரளவிற்கு செயல்பட்டுவரும் சோதனைத் சாவடிகளைக் கடந்து, கேரளப் பகுதிகளுக்கு ரேஷன் அரிசி, இலவச தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றைக் கடத்திச் சென்று விற்பனை செய்வதும், வெளி மாவட்டங்களிலிருந்து தேனி மாவட்டம் வழியாக எரிசாராயம் கடத்திச் செல்வதும் வாடிக்கையாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் கிலோ ரூ.1-க்கு விற்கப்படும் ரேஷன் அரிசியை, கேரளத்திற்கு கடத்திச் சென்று கிலோ ரூ.8 முதல் 10 வரை விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.
மாவட்டத்தில் அதிகளவில் உத்தமபாளையம் வட்டாரத்தில் 1.30 லட்சம் குடும்ப அட்டைகளுக்கும், போடி வட்டாரத்தில் 60 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கும் அரிசி விநியோகம் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் இருந்துதான் கேரளத்திற்கு அதிகளவில் அரிசி கடத்தல் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் அவ்வப்போது நடத்திவரும் சோதனையில் 2009, ஏப்ரல் முதல் தற்போது வரை கேரளத்திற்கு கடத்திச் செல்ல முயன்றதாக 1300 டன் ரேஷன் அரிசி, 4600 லிட்டர் மண்ணெண்ணெய், 36 சமையல் காஸ் சிலிண்டர்கள், 15 ஆயிரம் லிட்டர் எரிசாராயம், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 42 வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
எல்லையோர வருவாய்த் துறை சோதனைச் சாவடிகளில் 2001-ம் ஆண்டு வரை தலா மூன்று துணை வட்டாட்சியர், மூன்று கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, 8 மணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர். தடையற்ற உணவுப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளால், 2001-ம் ஆண்டு முதல் வருவாய்த் துறை சோதனைச் சாவடிகளில் பணியாளர்களை அரசு நியமிக்கவில்லை. இதர துறைகளைச் சேர்ந்த சோதனைச் சாவடிகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.
இந்த சோதனைச் சாவடிகள் வழியாக இரண்டு சக்கர வாகனங்கள், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் ரேஷன் அரிசி தடையின்றி கடத்தப்பட்டு வருவதாகவும், ரேஷன் பொருள்கள் கடத்தலைத் தடுக்க சோதனைச் சாவடி அலுவலர்கள் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து ரேஷன் பொருள்கள், தமிழக அரசின் இலவச தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றை கேரளத்திற்குக் கொண்டு செல்வதைத் தடை செய்ய காவல் துறை சோதனைச் சாவடிகளில் பணியிலுள்ள போலீஸôருக்கு மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க எல்லையோர வருவாய்த் துறை சோதனைச் சாவடிகளில் துணை வட்டாட்சியர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டது.
அதன்படி, சோதனைச் சாவடிகளில் காவல் துறையினருடன் சேர்ந்து சில தினங்கள் மட்டும் பணியாற்றிய வருவாய்த் துறையினர், வழக்கமான அன்றாட அலுவல்கள் பாதிப்பதாகக் கூறி, தொடர்ந்து பணியாற்ற மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வருவாய்த் துறை சோதனைச் சாவடிகள், பணியாளர்களின்றி செயல்படாமல் உள்ளன.
ரேஷன் பொருள்கள் மற்றும் எரிசாராயம் கடத்தலைத் தடுக்க, தேனி மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வருவாய்த் துறை சோதனைச் சாவடிகளில் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கவும், அனைத்து துறை சோதனைச் சாவடிகளிலும் சோதனை மற்றும் கண்காணிப்பைப் பலப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.