ஒரு ஊராட்சித் தலைவியின் பரிதாப நிலை...!

மதுரை, மே 4: உடைந்துபோன ஓட்டுக்கூரை, இடிந்துபோன சுவர், வாசலில் மண்டிக் கிடக்கும் முள்புதர். இதுதான் அவரது வீடு. எண்ணெய் இல்லாத தலை, கிழிசல் நிறைந்த உடை என பார்க்கவே பரிதாபமாகக் காட்சியளிக்கிறார் அவர்.
Updated on
2 min read

மதுரை, மே 4: உடைந்துபோன ஓட்டுக்கூரை, இடிந்துபோன சுவர், வாசலில் மண்டிக் கிடக்கும் முள்புதர். இதுதான் அவரது வீடு. எண்ணெய் இல்லாத தலை, கிழிசல் நிறைந்த உடை என பார்க்கவே பரிதாபமாகக் காட்சியளிக்கிறார் அவர். அந்தப் பெண்மணி வேறு யாருமல்ல, ஒரு ஊராட்சியின் தலைவி!

÷மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வீடின்றி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட அந்த தலித் ஊராட்சித் தலைவி தனது இருப்பிடமான இடிபாடுகளுடன் கூடிய வீட்டிற்குப் பட்டா கோரி கடந்த 4 ஆண்டுகளாகப் போராடி வருகிறார் என்றால் ஆச்சரியமாக இல்லை?

÷இது கதையல்ல. உண்மை. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி செல்லும் வழியில் வாலாந்தூர் அருகே உள்ளது கே.நாட்டாபட்டி ஊராட்சி. இதில் குரக்குடி, வீரபாண்டி, வின்னகுடி உள்ளிட்ட ஊர்களும் அடக்கம். இவ்வூரைச் சேர்ந்தவர் ராமுத்தாய். கணவர் தங்கம், 2 மகள்கள், 1 மகன் என கூலி வேலை செய்து வந்தார் படிப்பறிவில்லாத ராமுத்தாய்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சித் தலைவியாகத் தேர்வு செய்யப்பட்ட இவர், பதவிக்கு வந்த நிலையிலும், கூலி வேலை செய்தே குடும்பத்தைக் காப்பாற்றும் கட்டாயம் ஏற்பட்டது. சுகாதாரத் துறையில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி குடும்பத்தாருக்குச் சொந்தமான தோட்டத்தில் தினமும் ரூ. 50 கூலிக்கு வேலை செய்து வருகிறார் ராமுத்தாய்.

அவரது கணவரும் அங்கேயே கூலி வேலை செய்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் நாட்டாபட்டி தெற்குத் தெருவில் ரூ.10,000 மதிப்பில் கச்சா தொகுப்பு வீடு ராமுத்தாய்க்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரே அறையாக உள்ள அந்த சின்னஞ்சிறிய வீட்டின் ஓட்டுக்கூரை உடைந்தும், சுவர் இடிந்தும் போனதால், மழைக் காலத்தில் குடியிருக்க முடியவில்லை.

இதனால், தனக்கு தொகுப்பு வீடு ஒதுக்கக் கோரி உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் ராமுத்தாய் முறையிட்டார்.

ஆனால், "ஊராட்சித் தலைவிக்கு' வீடு ஒதுக்கினால் பிரச்னை ஏற்படும் என அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால், தனது சேதமடைந்த வீட்டைச் சீரமைக்க கடன் அல்லது நிதி உதவி தருமாறு ராமுத்தாய் கோரினார். ஆனால், ராமுத்தாயின் கணவருடைய சகோதரர்கள் 4 பேர் என்பதால், அவர்கள் குடியிருந்து வரும் பூர்வீக நிலத்துக்கு தனிப் பட்டா இல்லை. அப்படி தனிப் பட்டா இருந்தாலே குடியிருப்பு சீரமைப்பு நிதி தர முடியும் என்று அதிகாரிகள் அதையும் நிராகரித்துவிட்டனர். மேலும், ராமுத்தாய் வீட்டுக்குத் தனிப் பட்டா பெற ரூ. 6,000 வேண்டும் என உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் கேட்டனராம். அவ்வளவு தொகையை தன்னால் முழுதாகத் தர முடியாது என ராமுத்தாய் கூறியதால், பட்டா வழங்கப்படவில்லையாம்.

ராமுத்தாய்க்கு தோட்ட வேலையில் தினமும் ரூ. 50 கிடைக்கிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தினமும் ரூ. 100 கிடைக்கும் என்பதால், அதில் சேரச் சென்றார். ஆனால், ஊராட்சித் தலைவி என்பதால், ராமுத்தாய் உள்ளிட்ட அவரது வீட்டாரை அதில் சேர்க்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

படிப்பறிவில்லாத, கிராமியத்தனம் உள்ள ராமுத்தாய்க்கு கையெழுத்துப் போட மட்டுமே தெரியும். அவருக்கு வேறு எந்த விவரமும் தெரியாது. எனவே, துணைத் தலைவர்தான் ஊராட்சியில் அனைத்தையும் கவனிக்கிறார் என்கின்றனர் அப் பகுதி மக்கள். ராமுத்தாய் இதுவரை 3 முறை மட்டுமே மதுரைக்கு வந்துள்ளார்.

விடிந்தால் தோட்ட வேலை, அடைந்தால் வீடு என்ற நிலையிலேயே அவரது பொழுது கழிகிறது. ராமுத்தாய்க்கு ஊராட்சித் தலைவி என்ற முறையில் மாதம் ரூ. 500 ஊதியம் வருகிறது. குடும்ப மொத்த வருமானம் மாதம் ரூ. 4000 மட்டுமே என்கிறார் ராமுத்தாய்.

இதனால், ராமுத்தாய்க்கு தற்போது கிலோ ரூ.1 ரேஷன் அரிசிதான் உணவாகிறது. அரசின் இலவச காஸ் இணைப்புக்கூட இல்லாமல், விறகு அடுப்பிலேயே அவர் சமையல் செய்கிறார். பதவி வந்ததாலேயே பல வருவாயை இழந்து வீடின்றி தவிக்கும் ராமுத்தாயை நாம் சந்தித்தபோது, ""நானாக இப் பதவியைக் கேட்கவில்லை. ஊரார் பார்த்து என்னைத் தேர்ந்தெடுத்தனர்'' என்றார்.

ஆனால், என் வீட்டருகே கூட, ""குடிநீரும், தெருவிளக்கும் அமைக்க முடியவில்லை. அப்புறம் எனக்கு எதற்கு இந்தப் பதவி?'' என சலித்துக் கொள்கிறார் ராமுத்தாய்.

தலித்துகளது உரிமைக்குப் போராடுவதாகக் கூறும் அமைப்புகளும், தலித் ஆட்சி நடப்பதாகக் கூறும் ஆட்சியாளர்களும் ராமுத்தாய் போன்ற படிப்பறிவற்ற தலித் பெண் ஊராட்சித் தலைவியின் பரிதாப நிலை கண்ணில் படாமல் இருப்பதுதான் காலத்தின் கோலம் போலும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com