வடமலையான் மருத்துவமனையில் சர்க்கரை நோய் பாத சிகிச்சை மையம் தொடக்கம்

மதுரை, மே 22: மதுரையில் உள்ள வடமலையான் மருத்துவமனை சர்க்கரை நோய் பாத சிகிச்சை மருத்துவ மையத்தை தொடங்கியுள்ளது.  இது தொடர்பாக வடமலையான் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி
Updated on
2 min read

மதுரை, மே 22: மதுரையில் உள்ள வடமலையான் மருத்துவமனை சர்க்கரை நோய் பாத சிகிச்சை மருத்துவ மையத்தை தொடங்கியுள்ளது.

 இது தொடர்பாக வடமலையான் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி வடமலையான், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

 உலகில் இந்தியர்களே அதிக அளவில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோயின் தலைநகரம் என்று சொல்லும் அளவுக்கு இந்நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலக அளவில் 24.6 கோடி பேர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 4.5 கோடி பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவிகிதம் பேருக்கு கால் பாதங்களில் புண்கள் ஏற்படுகின்றன. இவர்களில் பாதிப்பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு தங்கள் கால்களையே இழக்க வேண்டிய அபாயம் உள்ளது.

 சர்க்கரை நோயால் ஏற்படும் கால் இழப்பைத் தடுக்க முடியும். இதை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், சர்க்கரை நோயாளிகளை கால் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்கும் விதமாக சர்க்கரை நோய் பாத சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது விரிவான மற்றும் பாதுகாப்பு முறைகளை உள்ளடக்கிய சிகிச்சை மையமாகும் என்று தெரிவித்தார்.

 பொது அறுவைச்சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெ.ஜெயசுதாகர் ஜேசுதாசன் பேசுகையில், சர்க்கரை நோய் உள்ளவர்களின் பாதங்களில் ஏற்படும் சிறிய புண்கள் சிலசமயங்களில் பெரிய அளவில் பாதித்து காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனினும் கால்களை பராமரிப்பதன் மூலமும், சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலமும் கால் இழப்பைத் தடுக்க முடியும் என்றார்.

 சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் டி.கணேஷ் பேசுகையில், சர்க்கரை நோய் பற்றிய சில கசப்பான உண்மைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோய் அதிகம் உள்ளவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் முதல் மூன்று, நான்கு ஆண்டுகளில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் நோயைக் கட்டுப்படுத்த முடியும். பாதங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், தொடர்ந்து கவனிக்காமல் விட்டால் கால்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வருமுன் காப்போம் என்ற வகையில் ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சைகளைப் பெற்றால் 50 சதவிகித கால் இழப்புகளைத் தடுக்க முடியும். பாதங்களை முறையாகப் பரிசோதனை செய்து பராமரிக்க வேண்டியது அவசியம் என்றார்.

 எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.பி.குமரகுகு, காலை அகற்றாமல் பாதங்களில் மேற்கொள்ளவேண்டிய சீரமைப்பு முறைகளை விளக்கினார். சர்க்கரை மற்றும் நரம்புக் கோளாறுக்கான பரிசோதனை, சரியான காலணிகளைப் பயன்படுத்துதல், பாதபராமரிப்பு பற்றிய அறிவுரை, பாதிக்கப்பட்ட எலும்புகளுக்கு அறுவைச்சிகிச்சை மூலம் மறுகட்டுமானம் செய்தல் உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார்.

 முன்னதாக வடமலையான் மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரி ஹேமலட்சுமி சிவகுமார் வரவேற்றார். அவர் பேசுகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சுகாதாரக் கல்வியாளர், சுகாதார நிபுணர்கள் இணைந்து பாத பராமரிப்புக்காக பணியாற்றுவர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com