கம்பன் அதிகம் வலியுறுத்துவது சமயச் சீர்திருத்தமே

மதுரை, மே 23: ராம காவியத்தில் கம்பன் மிகுதியும் வலியுறுத்துவது "சமயச் சீர்திருத்தமே"  என்று தீர்ப்பு வழங்கினார் மதுரையில் கம்பன் விழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக இருந்த பேராசி
Updated on
2 min read

மதுரை, மே 23: ராம காவியத்தில் கம்பன் மிகுதியும் வலியுறுத்துவது "சமயச் சீர்திருத்தமே"  என்று தீர்ப்பு வழங்கினார் மதுரையில் கம்பன் விழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக இருந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா.

  மதுரைக் கம்பன் கழக அறக்கட்டளையின் 7-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி "கம்பன் மிகுதியும் வலியுறுத்துவது சமயச் சீர்திருத்தமே- சமுசாய மறுமலர்ச்சியே' என்ற  தலைப்பில் நடுவர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

 இதில், சமய சீர்திருத்தமே என்ற தலைப்பில் முனைவர் தா.கு.சுப்பிரமணியன் பேசியது:

 கம்பராமாயணம் ஒரு சமய நூல். அதில் சமுதாயக் கருத்துக்கள் ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ளனவே தவிர, சமயச் சீர்திருத்தத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

 கம்பர் வாழ்ந்த காலம் சோழ மன்னர் ஆண்டதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் காலத்தில் சைவ மதத்துக்கும், வைணவ மதத்துக்கும் இடையே போராட்டங்கள் வலுத்து வந்தன. அவற்றுக்கு தீர்வு கூறும் விதத்தில்தான் பல இடங்களில் சமயச் சீர்திருத்தத்தை கம்பர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் நன்றாக இருந்தால்தான் சமுதாயம் செம்மையாக இருக்க முடியும். சமுதாயத்தை செம்மைப்படுத்தத்தான் சமயங்கள் தோன்றின. அப்போது சமயச் சீர்திருத்தங்கள் அதிகம் தேவைப்பட்டுள்ளது என்பதே உண்மை நிலவரம் என்றார்.   

 பேராசிரியர் த.ராஜாராம் (சமுதாய மறுமலர்ச்சியே): சைவ, வைணவ மத ஒற்றுமையை வலியுறுத்தி கம்பராமாணயத்துக்கு முன்பே பல நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. கம்பர் வாழ்ந்த சோழ நாட்டில் மக்கள் சாதியால் பிரிக்கப்பட்டுக்கிடந்தனர். இந்த வேலையை இந்த சாதியினர்தான் செய்ய வேண்டும் என மன்னரால் சட்டமியற்றப்பட்டது.

மேலும், பல்வேறு வகையான வரி வசூலிப்பாலும் மக்கள் மிகுந்த துயரத்தில் இருந்தனர். இதுபோன்ற சமுதாயப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வுகாண வேண்டிய சூழல் அப்போது இருந்தது.

 மேலும், குகனோடு சேர்ந்து ஐவரானோம் என்ற ராமரின் வார்த்தை, சாதாரண குலத்தில் பிறந்த குகன் ஒரு சக்கரவர்த்திக்கு ஈடாக கம்பன் காட்டுவதும், ஜடாயுவை தந்தையாக ஏற்றுக்கொண்டு, ராமன் ஈமச்சடங்கு செய்தது போன்றவையால் கம்பனால் அங்கு சாதிக்கு சவுக்கு அடி கொடுக்கப்பட்டு, சமுதாய மறுமலர்ச்சியையே அதிகம் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆணுக்கும் கற்பு உண்டு என்பதை ராமர் மூலம் வலியுறுத்தியுள்ளார் கம்பர் என்றார்.

 பேராசிரியை எம்.விசாலாட்சி (சமய சீர்திருத்தமே): சோழ மன்னரால் அதிகம் வரிகள் வதிக்கப்பட்டு மக்கள் துன்புற்றனர் என பேராசிரியர் ராஜாராம் கூறியுள்ளார். கம்பர்

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். ஆனால், ஒரு இடத்தில் கூட

வரி குறித்த விஷயம் எங்கும் இல்லையே. பல இடங்களில் சமய ஒருமைப்பாட்டைத் தான் கம்பர் வலியுறுத்தியுள்ளார் என்றார்.

 பேராசிரியை ரேவதி சுப்புலட்சுமி (சமுதாய மறுமலர்ச்சியே): சமூக உணர்ச்சிகளைப் பாடும் காவியங்கள்தான் நிலைத்து நிற்கும். அந்த வகையில்தான் கம்பராமாயணமும்.

மனைவியைத் தவிர மற்றவர்களை தாயாக நினைக்க வேண்டும் என்ற ராமரின் கருத்தும், குகனோடு ஐவரானோம் என்ற இடத்திலும் முதன் முதலில் தீண்டாமைக்கான எதிர்ப்பை கம்பர் பதிவு செய்துள்ளார்.

 மேலும் ராமர் பட்டாபிஷேக காட்சியின்போது கம்பர் குறிப்பிடுகையில், ராமனுக்கு மணி மகுடம் சூட்டப்பட்டபோது நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களும் தங்களுக்கு மணிமகுடம் சூட்டப்பட்டதுபோல் உணர்ந்தனர் என்று சொல்லியதன் மூலம் அங்கு ஒரு மக்களாட்சி மலர வேண்டும் என்ற மனக்கருத்து அப்போதே கம்பருக்கு இருந்துள்ளது.

எனவே அவர் சமுதாய மறுமலர்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்றார்.

 எஸ்.ராஜா (சமய சீர்திருத்தமே): சமயம் குறித்த தெளிவான சிந்தனை இன்றைக்கும் நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் ஏராளமான போலி சாமியார்கள் உருவாகிறார்கள்.

கம்பராமாயணம் என்பதே திருமாலின் அவதாரத்தை பாடுவதற்கான நூல்தான். அதில், சமுதாய விழிப்புணர்வைவிட சமயச் சீர்த்திருத்தம் தான் அதிகம் சொல்லப்பட்டுள்ளது என்றார்.

 கி.சிவக்குமார் (சமுதாய மறுமலர்ச்சியே): ராமாயணத்தில் தனி மனித ஒழுக்கம்,

ஒரு மன்னன் எப்படி ஆள வேண்டும், மக்கள் மற்றும் அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது.

 ராமாயணத்தைக் கூர்ந்து கவனித்தால் ராமனால் வதைக்கப்பட்டவர்கள் (வாலி, ராவணன் உள்ளிட்டோர்) சமயம் காட்டிய கடவுளை வணங்கியவர்கள். கடவுள் வழிபாட்டில் சிறந்தவர்கள். வழிபாட்டை விட பண்பாட்டில்தான் சிறந்து விளங்க வேண்டும் என்பதைத்தான் கம்பர் வலியுறுத்துகிறார். ராமன், சமயத்தின் அடையாளம். ராவணன் சமுதாயத்தின் அடையாளம்.

போரில் ராவணன் நிராயுதபாணியாக நின்ற போது அறம் தான் நிரந்தரம் என்பதை ராவணனுக்கு வலியுறுத்தியது மூலம் சமயத்தின் அடையாளத்தின் மூலவே சமுதாயக் கருத்தை கம்பர் சொல்ல வைத்துள்ளார் என்றார்.

 நடுவர் சாலமன் பாப்பையா: இரு வாதங்களையும் வைத்துப் பார்க்கும்போது கம்பன் மிகுதியும் வலியுறுத்தியுள்ளது எனது கருத்துப்படி சமய சீர்திருத்தத்தையே என தீர்ப்பளித்தார்.

 பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு இந்தியன் வங்கி துணைப் பொது மேலாளர் எம். கதிரேசன்,  ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ஜி.ராமானுஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

"வாலி மோட்சம்" என்ற தலைப்பில் பாலா நந்தகுமார் குழுவினரின் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. கம்பன் கழகச் செயலர் ரா.சொக்கலிங்கம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com