நிலச் சீர்திருத்தத் திட்டத்தில் பட்டா வழங்க கால தாமதம்

தேனி, அக். 31:÷நிலச் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு பட்டா தர வருவாய்த் துறையினர் கால தாமதம் செய்வதாகவும், அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலி
Updated on
1 min read

தேனி, அக். 31:÷நிலச் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு பட்டா தர வருவாய்த் துறையினர் கால தாமதம் செய்வதாகவும், அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

÷தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய பகுதிகளில் நில உச்சவரம்புச் சட்டத்தின்படி ஜமீன்தார்களிடம் இருந்த 2,200 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தியது.

÷இந்த நிலங்களை, நிலச் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ், எம்.சுப்புலாபுரம், பொன்னம்மாள்பட்டி, சிதம்பரம் விலக்கு, குமணன்தொழு, பொன்னம்படுகை, ஓட்டணை, நரியூத்து, வாய்க்கால்பாறை, மானூத்து, ஆத்துக்காடு, மூலக்கடை, செங்குளம், கோவிலாங்குளம், கோவில்பாறை, ஆத்துப்பாறை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வசிக்கும் நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கு அரசு வழங்கியது.

கால தாமதம்: வருவாய்த் துறை மூலம் 1984-ம் ஆண்டு 930 பேருக்கு நிலம் வழங்கியதற்கான தோராயப் பட்டா வழங்கப்பட்டது. அதை ஆதாரமாக வைத்து, நிலம் பெற்றவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானோருக்குத் தற்போது வரை நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்கப்படவில்லை. நில அளவீடு செய்யப்பட்ட 60 பேருக்கும் பட்டா வழங்குவதில் தாமதம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

÷இதனால், அரசு வழங்கும் மானிய உதவிகள், மின் இணைப்பு, வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கக் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற முடியாமல் இவ்விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

÷இது குறித்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் டி.கண்ணன், செயலர் என்.சுருளிநாதன் ஆகியோர் கூறியதாவது:÷தேனி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களை, மதுரையில் உள்ள நிலச் சீர்திருத்த உதவி ஆணையர் அலுவலகம் மூலம் அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டும்.

÷முறையாக தோராயப் பட்டா பெற்று நிலத்தில் விவசாயம் செய்து வருபவர்களுக்கு நிரந்தரப் பட்டா வழங்கத் தாமதம் செய்யப்படுகிறது. நில அளவைப் பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து, பட்டா வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். சில இடங்களில் பயனாளிகளுக்குப் பதிலாக பினாமி பெயர்களில் தோராயப் பட்டா வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

÷இது குறித்து மாவட்ட வருவாய்த் துறை பணியாளர்கள் கூறியதாவது:÷நிலச் சீர்திருத்தத் திட்டத்தில் வழங்கிய நிலங்களை முறையாக அளவீடு செய்து ஒப்படைப்பு செய்யாததால், தோராயப் பட்டாவின் அடிப்படையில் தனி நபர்களுக்கு நிரந்தரப் பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

÷தற்போது நிலச் சீர்திருத்த உதவி ஆணையர் அலுவலகம் மூலம் தோராயப் பட்டா பெற்றுள்ள 165 பேருக்கும், தோராயப் பட்டா பெற்றவர்களின் வாரிசுதாரர்களாக கண்டறியப்பட்டுள்ள 80 பேருக்கும் நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com