மதுரையில் 1.50 கோடியில் "நான்மாடக்கூடல் நிரந்தர காட்சிக்கூடம்'!

மதுரை, அக். 31: மதுரை மாநகரின் பழம் பெருமைகளை விளக்கும் வகையிலான நிரந்தர வரலாற்றுக் காட்சிக்கூடம் 1.50 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டடப் பணிக்கு முதல் கட்டமாக 50 லட்சத்தை ஒதுக்கி அரசு உத்தரவ
Updated on
2 min read

மதுரை, அக். 31: மதுரை மாநகரின் பழம் பெருமைகளை விளக்கும் வகையிலான நிரந்தர வரலாற்றுக் காட்சிக்கூடம் 1.50 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டடப் பணிக்கு முதல் கட்டமாக 50 லட்சத்தை ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, புராதன வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். இங்கு நான்காம் தமிழ்ச் சங்கம் உள்ளது. தென்தமிழக கலாசார நகராகவும் திகழ்கிறது. இத்தகைய பழம்பெருமை மிக்க இந்த நகர் குறித்து இளைய தலைமுறையினருக்கும், வெளிநாட்டினருக்கும் எடுத்துரைக்கும் வகையிலான அமைப்புகள் ஏதும் இல்லை என்ற குறைபாடு இருந்துவந்தது.

இந்த நிலையில், மதுரையின் பழமையான வரலாற்றை விளக்கவும், காட்சியாக விவரிக்கும் வகையிலும் நான்மாடக்கூடல் நிரந்தர காட்சிக்கூடம் அமைக்கவேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பசும்பொன், அரசுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் காட்சிக்கூடத்துக்கான கருத்துரு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனடிப்படையில், மாநில சுற்றுலாத் துறைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோரது தீவிர முயற்சியால் காட்சிக்கூடம் அமைக்க தமிழக அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது.

காட்சிக் கூடம் அமைக்கத் தேவையான இடத்தை மதுரை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கித் தந்தது. காந்தி நினைவு அருங்காட்சியகம் முன், யூனியன் கிளப் அருகே சுமார் 51 சென்ட் நிலம் (அரை ஏக்கர்) காட்சிக்கூடத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் மாநில நகர் ஊரமைப்புத் துறை மூலம் காட்சிக்கூடத்துக்கான கட்டடம் அமைக்க 25 லட்சம் நிதியையும் மாநில அரசு கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்து அறிவித்தது. ஆனால், இந்த அளவு நிதியில், காட்சிக்கூட சுற்றுச்சுவர் மட்டுமே கட்ட முடியும் என்றும், ஆகவே கூடுதல் நிதி தேவை என்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், காட்சிக்கூடத்துக்கான கட்டடங்கள் அமைக்க 50 லட்சம் செலவாகும் எனவும், கூடத்தில் அமைக்கப்படும் ஓவியங்கள், பழமையான கோயில்கள், மகால்கள் உள்ளிட்டவற்றின் மாதிரி வடிவங்களை தத்ரூபமாக அமைப்பதற்கும், நவீன வசதிகள் கொண்ட உள்கட்டமைப்புக்கு 1 கோடி செலவாகும் என்றும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டு கருத்துருவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை வடடாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ், வரலாற்று காட்சிக்கூடத்துக்கான நிதியைப் பெற நடவடிக்கை எடுத்தார். மேலும், சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு உள்ளிட்டோரது முயற்சியால் தற்போது நிரந்தர காட்சிக்கூடம் அமைக்க 50 லட்சம் நிதியை ஒதுக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு உத்தரவில் (ந.க.எண்.10715/ யுபி14, நாள்: 30.9.2010) மதுரையில் நான்மாடக்கூடல் எனும் நிரந்தர காட்சிக்கூடம் அமைத்து இலக்கியம், வரலாற்று செய்திகள், புகைப்படம், ஓவியம், மாதிரிகள் அமைத்து மதுரையின் பழம்பெருமைகளை இளைய தலைமுறையினரும், வெளிநாட்டினரும் அறியும் வகையில் உருவாக்கும் திட்டம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான நிதி சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை மூலம் அனுப்பிவைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை நகரின் பண்பாடு, கலாசாரத்தை விளக்கும் வகையில் நூலகம், குறும்படம் ஒளிபரப்புக் கூடம் என பல  நவீன வசதிகளுடன் இக்கூடம் அமைக்கப்பட உள்ளது.

இக்கூடத்துக்கான கட்டடம் கட்டும் பணிக்கு விரைவில் டெண்டர் விடப்பட உள்ளதாகவும், அதன் பின் கட்டடம் கட்டும் பணி ஓராண்டில் நிறைவுறும் எனவும் மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com