நோய்த்தடுப்பு தாற்காலிக ஊழியர் நியமனத்தில் தாமதம்

மதுரை, அக். 9: தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க நியமிக்கப்படும் தாற்காலிகப் பணியாளர்கள் (மஸ்தூர்) நியமனம் தாமதமாகி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள்
Updated on
2 min read

மதுரை, அக். 9: தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க நியமிக்கப்படும் தாற்காலிகப் பணியாளர்கள் (மஸ்தூர்) நியமனம் தாமதமாகி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  தமிழகத்தில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் மழைக்காலத்தில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் மற்றும் தண்ணீரில் பரவும் நோய்களைத் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை தாற்காலிகப் பணியாளர்களை நியமிப்பது வழக்கம்.

  அதாவது சுகாதாரத்துறையில் வட்டம் (பிளாக்) தோறும் 10 தாற்காலிகப் பணியாளர்கள்  நியமிக்கப்படுவர். இந்தப் பணியாளர்கள் கொசு மருந்து தெளித்தல், சுகாதாரத்தை பேணும் வகையில் குப்பைகளை அகற்றுதல், தண்ணீரில் பரவும் நோய்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய

பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

  இந்தப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக | 110 வழங்கப்பட்டுவந்தது. இதற்கான சிறப்பு நிதியும் சுகாதாரத் துறையால் அளிக்கப்படும். மேலும், கிராம சுகாதாரக்குழு நிதி, மாவட்ட நோயாளிகள் நலநிதி ஆகியவற்றிலிருந்தும் சுகாதாரத்தை மேம்படுத்த நிதிகள் செலவிடப்பட்டும் வருகின்றன.

  கடந்த 2008 ஆம் ஆண்டில் மாநிலத்தில் சுகாதாரத்துறை இயக்குநரகம் மூலம் தாற்காலிகப் பணியாளர்கள் ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரையில் நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

  அதன்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் மழைக்காலத்தில் 130 தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  ஆனால், தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி இருமாதங்களாகியும் நோய்த்தடுப்பு தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.

   மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் டைபாய்டு, எலிக்காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நீரினால் பரவும் நோய்பாதிப்பும், கொசுக்கள் மூலம் பரவும் மலேரியா, டெங்கு காய்ச்சலும் மேலும் சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல் உள்ளிட்டவையும் பரவியிருப்பது தெரியவந்துள்ளது.

   மதுரை செல்லூர், அனுப்பானடி மற்றும் மேலூர், திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளில் சிலருக்கு சிக்குன்குனியா பாதிப்பு இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மேலும் பலருக்கு நோய் பாதிப்பு பரவும் நிலையும் உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

  அதேபோல, சென்னை, தூத்துக்குடி, ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் தற்போது மலேரியா நோய் பாதிப்பு காணப்படுவதாகவும், அங்கிருந்து மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவோர் மூலம் மலேரியா நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  கடந்த ஆண்டு தத்தனேரி, சிந்தாமணி, வடக்குமாசி வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகமாக இருந்தது. இப்பகுதிகளில் ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கை எடுத்திருந்தால், நோயின் பாதிப்பு அதிகம் இருந்திருக்காது என கூறப்பட்டது.

  எனவே நடப்பு ஆண்டில் இப்போதே அரசு, சுகாதாரப் பிரிவுக்கு தாற்காலிக பணியாளர் (மஸ்தூர்) நியமனத்துக்கு உடனடியாக அனுமதி வழங்கவேண்டும். அப்படி வழங்கினால்தான் மழை தொடங்கிய நிலையில் பரவிவரும் தொற்றுநோயை தடுக்கமுடியும் என்பதும் சுகாதார ஆய்வாளர்களது கருத்தாகும்.

  நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கான தாற்காலிகப் பணியாளர்கள் நியமனத்துக்கு சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்னும் அனுமதி வழங்காத நிலையில், மதுரையில் பல இடங்களில் கொசுக்கள் மூலம் மலேரியா உள்ளிட்ட பல நோய்கள் பரவிவருவதாக கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனை மேம்பாட்டுக்காக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நோயாளிகள் நலச்சங்கத்தின் நிதியையே நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் சுகாதார ஆய்வாளர்கள்.

   இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரப்பிரிவு துணைஇயக்குநர் ஆ.பழனிச்சாமியிடம் கேட்டபோது, மாவட்டத்தில் நோயாளிகள் நலச்சங்கம் நிதி உதவியுடன் 49 தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் திருநகர், அவனியாபுரம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் தற்போது கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com