மதுரை, செப்.24: ஜல்லிக்கட்டில் தமிழக அளவில் புகழ் பெற்ற மதுரை ஆமூர் கோயில் காளை உடல்நலம் தேறுவதற்காக கிராம மக்கள் விரதம் இருந்துவருகின்றனர். இதுவரை காளையின் சிகிச்சைக்காக மட்டும் | 50,000 வரை செலவிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெற்றோரைக் கூட சரியாக கவனிக்காத பிள்ளைகள் இருக்கும் இக்காலத்தில், கோயில் காளை நலம் பெறவேண்டி கிராம மக்கள் விரதமிருப்பதும், பணத்தைச் செலவழித்து வருவதும் வியப்பாக இருக்கிறதல்லவா?
மதுரை மாவட்டம், பழங்காலத்திலிருந்தே ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்றதாகும். ஜல்லிக்கட்டில் பெரும்பாலும் கோயில் காளைகளே பங்குபெற்று வருகின்றன. இதுபோன்ற காளைகளை அந்தந்தக் கிராமத்தின் கெüரவச் சின்னமாகவே அப்பகுதி மக்கள் கருதி வருகின்றனர்.
மதுரை அருகே ஒரு கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளையான கோயில் காளை சில மாதங்களுக்கு முன் இறந்தது. இதையடுத்து அப்பகுதி கிராம மக்கள் மொட்டையடித்து துக்கம் கொண்டாடினர்.
தற்போது, கோயில் காளை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை அறிந்த ஆமூர் கிராம மக்கள் காளை குணமடைய வேண்டி விரதம் இருந்து வருகின்றனர். மேலும், வீடுதோறும் பணம் வசூலித்து காளையின் சிகிச்சைக்காக இதுவரை | 50,000 வரை செலவிட்டும் உள்ளனர்.
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் அருகே உள்ளது ஆமூர். இக்கிராமத்தில் உள்ள அருள்மிகு நொண்டிச்சாமி திருக்கோயிலுக்கு ஊர் மக்களால் நேர்ந்து விடப்பட்ட காளைக்கு தற்போது சுமார் 10 வயதாகிறது.
இந்தக் காளை இதுவரை சுமார் 200-க்கும் மேலான ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு தங்கக்காசு, வெள்ளிக்காசு, தங்கமெடல், பீரோ, கட்டில் என பல பரிசுப் பொருள்களை வென்றுள்ளது.
ஜல்லிக்கட்டில் வீரர்களுக்கு சவால் விடும் இந்தக் காளை ஒரே ஒருமுறை மட்டும் வீரர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.
இந்தக் காளையை அப்பகுதி மக்கள் நொண்டிச்சாமி காளை என்றே அழைத்து வருகின்றனர். யார் வீட்டில் விசேஷம் என்றாலும், கோயில் காளைக்கு முதல் மரியாதை செய்வதை கிராம மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த முரட்டுக்காளை கடந்த 40 நாள்களுக்கு முன் திடீரென உடல் சுகவீனம் அடைந்து கீழே படுத்தது. இரையும் சாப்பிடவில்லை. உடனடியாக நாட்டு வைத்தியரை அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். பணம் செலவிட்டும் எந்த
முன்னேற்றமும் இல்லாதது கண்டு பதற்றமடைந்த கிராம மக்கள், நான்கு வாரங்களுக்கு முன்பு காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கால்நடை உதவி இயக்குநர் டாக்டர் சின்னதுரை மற்றும் டாக்டர்கள் கோபிநாத், பன்னீர்செல்வம் ஆகியோர் காளையை பரிசோதித்த போது நரம்புத்தளர்ச்சியால் காளை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் நாட்டு வைத்தியர் மூலம் தவறான சிகிச்சை அளித்ததால் குடல் புண் ஏற்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காளைக்கு டாக்டர்கள் சிறப்புச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காளை உடல்நலம் பெற வேண்டி கிராம மக்கள் சிலர் விரதம் இருந்து வருகின்றனர். மேலும் சிலர் கால்நடை மருத்துவமனை அருகிலேயே தங்கி சமைத்துச் சாப்பிட்டு காளையை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.
இதுபற்றி ஆமூர் கணக்குப்பிள்ளை திரிசங்கு கூறுகையில், "எங்களுக்கு கடவுள் போல இந்த நொண்டிச்சாமி காளை உள்ளது. எனவே காளை உடல் நலம் பெறவேண்டி நாங்கள் விரதம் இருந்துவருகிறோம். இதுவரை ஐம்பதாயிரம் ரூபாய்வரை செலவிட்டுள்ளோம். காளை உடல்நலம் பெற்று பழைய நிலையை அடைய எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கிறோம்' என்றார்.
டாக்டர்கள் கருத்து: ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நரம்புத்தளர்ச்சி நோய் ஏற்படுவதுண்டு. ஆனால், சிலர் நாட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்தலாம் என்று நினைக்கின்றனர். பின்னர் நோய் முற்றியபின் கால்நடை மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால் காளை இறக்கும் அபாயம் உண்டு. எங்கள் மருத்துவமனைக்கு மாதத்துக்கு 50 காளைகள் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகின்றன. இதில் நரம்புத்தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட காளைகளும் அடங்கும். மாதம் தோறும்
காளைகளுக்கு முறையான மருத்துவ பரிசோதனை செய்தால் இதுபோன்ற நோய் பாதிப்பை தடுக்க முடியும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.