கேரள இணைப்புச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படுமா? நிதி ஒதுக்காததால் முடங்கியதாகப் புகார்

தேனி, செப். 26: தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் கேரளத்துக்குச் செல்லும் சாக்கலூத்து மெட்டு இணைப்புச் சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டு 3   ஆண்டுகளாகியும், அரசுநிதிஒதுக்கீடு செய்யாததால் பணிகள் தொடக்கப்பட
Updated on
2 min read

தேனி, செப். 26: தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் கேரளத்துக்குச் செல்லும் சாக்கலூத்து மெட்டு இணைப்புச் சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டு 3  

ஆண்டுகளாகியும், அரசுநிதிஒதுக்கீடு செய்யாததால் பணிகள் தொடக்கப்படாமல் உள்ளன.

 தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்வதற்கு குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு, சாக்கலூத்துமெட்டு, டாப் ஸ்டேசன் ஆகிய இடங்கள் வழியாக சாலைகள் உள்ளன.

 இவற்றில் தற்போது குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகியவற்றின் வழியாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு கேரளத்துக்கு வாகனப் போக்குவரத்து உள்ளது.

 சாக்கலூத்துமெட்டு, டாப் ஸ்டேசன் வழியாக தார்ச்சாலை அமைக்கப்படாததாலும், வனத்துறை இடம் குறுக்கிடுவதாலும் கரடுமுரடான நடைபாதையாக இருந்து வருகிறது.

 மாவட்டத்தில் உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் கேரளம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம், உடும்பன்சோலை, சாந்தாம்பாறை, பூப்பாறை, மொண்டி எருமை, தூக்குப்பாலம் ஆகிய பகுதிகளில் ஏலம், தேயிலை, மிளகு, காபி தோட்டங்கள் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

 இந்தத் தோட்டங்களுக்கு கூலித் தொழிலாளிகளாக உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்டோர் கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய சாலைகளின் வழியாக 70 கி.மீ., தூரம் கேரளத்துக்குச் சென்று வருகின்றனர்.

 ஆனால், தேவாரம் பகுதியில் இருந்து சாக்கலூத்துமெட்டு வழியாக இடுக்கி  மாவட்டத்துக்கு 18 கி.மீ. தூரம்தான்.

 தேவாரத்தில் இருந்து சாக்கலூத்துமலை அடிவாரம் வரை 7 கி.மீ. வருவாய்த் துறை இடத்தின் வழியாகவும், 5 கி.மீ. வனத்துறை இடம் வழியாகவும் சாக்கலூத்துமெட்டு செல்லலாம்.

 சாக்கலூத்துமெட்டில் இருந்து நெடுங்கண்டம், உடும்பன்சோலை ஆகிய பகுதிகளுக்கு கேரள அரசு மூலம், சாலை மற்றும் போக்குவரத்து வசதி செய்து தரப்பட்டுள்ளது.

 இதனால், சாக்கலூத்துமெட்டு வழியாக கேரளத்துக்குச் சென்று வருவதற்கு இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என்பது, இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது. தமிழகத்தில் வனப்பகுதி இடம் வழியாக சாக்கலூத்துமெட்டு சாலை உள்ளிட்ட 5 இணைப்புச் சாலைகள் அமைப்பதற்கு நிதி ஓதுக்கீடு செய்யப்படும் என்று வனத்துறை அமைச்சர் செல்வராஜ் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

 இதனைத் தொடர்ந்து, தேவாரம் அருகில் டி.மேட்டுப்பட்டியில் இருந்து சாக்கலூத்துமலை அடிவாரம் வரை 2 கி.மீ. தூரத்திற்கு சாலை மற்றும் பாலங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அடிவாரத்தில் இருந்து சாக்கலூத்துமெட்டுக்கு இதுவரை இணைப்புச் சாலை அமைக்கப்படவில்லை. அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், திட்டப் பணிகள் தொடந்து நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய சாலைகளின் வழியாக கேரளத்திற்கு செல்வதற்கு அதிக தூரம், செலவு மற்றும் காலவிரயம் ஏற்படுவதாலும், இந்தச் சாலைகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலினாலும் சிரமம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

 மேலும், சாக்கலூத்துமெட்டுப் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினர், கல்வி, மருத்துவச் சிகிச்சை, விவசாய விளைபொருள்களின் வியாபாரத் தொடர்பு ஆகியவற்றுக்காக தமிழகப் பகுதிக்கு செல்வதற்கு பல கி.மீ., சுற்றி சென்றுவர வேண்டியுள்ளது. எனவே, தேவாரம்- சாக்கலூத்துமெட்டு இணைப்புச் சாலை அமைப்பதற்கு வனத்துறை அனுமதி பெற்று, தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டதற்கு, சாக்கலூத்துமெட்டுச் சாலை அமைப்பது குறித்து தமிழக வனத்துறை அமைச்சகம் கொள்கை ரீதியில் ஏற்றுக்கொண்டு, 2007-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தச் சாலை அமைக்கும் நிறுவனத்திடம் இருந்து வனப்பாதுகாப்புச் சட்டம் 1980-ன் கீழ் பிரேரணைகள் வரப்பெற்றால், மத்திய அரசின் ஒப்புதல் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

டி.ரங்கநாதபுரம் ஊராட்சித் தலைவர் திருப்பதிவாசகம் கூறியதாவது: சாக்கலூத்துமெட்டு இணைப்புச் சாலை திட்டத்தை செயல்படுத்த தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த சட்டப்பேரவை மனுக்கள் குழு மற்றும் பொது கணக்குத் தணிக்கை குழுவிடம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com