மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியை போடி நகராட்சியுடன் இணைக்க வலியுறுத்தி தீர்மானம்

போடி, மே 1: மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியை, போடி நகராட்சியுடன் இணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போடி நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  போடி நகர்மன்ற அவசரக் கூட்டம், த

போடி, மே 1: மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியை, போடி நகராட்சியுடன் இணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போடி நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 போடி நகர்மன்ற அவசரக் கூட்டம், தலைவர் ரதியாபானு தலைமையில் நடைபெற்றது. ஆணையர் க.சரவணக்குமார், துணைத்தலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 போடி நகராட்சி 1.9.1916-ம் தேதி முதல் மூன்றாம் நிலை நகராட்சியாக அமைக்கப்பட்டது. 5.10.1966-ல் 2-ம் நிலை நகராட்சியாகவும், 22.5.1998 முதல்நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 8.74 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நகராட்சி 91-ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு 33 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

 நகர ஊரமைப்பு விரிவு அபிவிருத்தி விதிகளின்படி, இந்நகராட்சியில் மேலும் வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்தும் பொருட்டு விரிவாக்கம் செய்தால், பொதுமக்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அருகில் உள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியை போடி நகராட்சியுடன் இணைத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வளர்ச்சி பணிக்கும், குடிநீர் தேவைக்கும் அவசியமாக இருக்கும்.

 மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குள்பட்ட கீழச்சொக்கநாதபுரம்,  மேலச்சொக்கநாதபுரம், ரெங்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, கரட்டுப்பட்டி, காந்தி நகர் காலனி, போடி மெட்டு ஆகிய கிராமங்களை, போடி நகராட்சியுடன் இணைக்க அரசின் அனுமதிக்கு கருத்துரு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது.

 போடி நகராட்சிப் பகுதியில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு இடம் கோரி, அதன் மதுரை கோட்ட உதவிப் பொறியாளர் எழுதிய கடிதத்தின்படி, போடி வட்டாட்சியர் அலுவலகத்தை ஒட்டி உள்ள நகராட்சி இடத்தை வழங்கவும், அங்கு கட்டப்படும் குடியிருப்புகளில் தற்போது நகராட்சி காலனியில் குடியிருக்கும் துப்பரவுப் பணியாளர்களை குடியமர்த்தவும், நகராட்சி காலனியை காலி செய்து, அதனை வணிக உபயோகத்திற்கு மாற்றவும் தீர்மானிக்கப்பட்டது.

 போடி நகராட்சி எல்லைக்குள்பட்ட பஸ் நிலையம் அருகே தேவர் சிலையிலிருந்து வ.உ.சி. சிலை வரை பெரியாண்டவர் ஹைரோடு  நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வ.உ.சி. சிலையிலிருந்து திருமலாபுரம் காமராஜர் சிலை வரையிலும், அங்கிருந்து சாலை காளியம்மன் கோயில் வரையிலும், தேவர் சிலையிலிருந்து  குப்பிநாயக்கன்பட்டி வழியாக வஞ்சி ஓடை வரையிலும் உள்ள சாலையை நெடுஞ்சாலையாக மாற்றி பராமரிக்க, இந்த சாலையை நெடுஞ்சாலை துறையினரிடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

 இதேபோல, நகராட்சி தினசரி காய்கறி மார்கெட்டை கால்நடை மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றுதல், டிஜிட்டல் பேனர் வைப்பதை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

 கூட்டத்தில் பொறியாளர் குருசாமி, உதவிப் பொறியாளர் குணசேகரன், நகரமைப்பு ஆய்வாளர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com