வங்கிக் கடன் கிடைப்பதில் தாமதம்: வீடு கட்டும் பணி பாதிப்பு

தேனி, பிப். 1:தேனி மாவட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு வங்கிகள் கடன் வழங்க கால தாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் வீடுகளை கட்ட முடியாமல் சிரமப்படுவதாக பயனாளி
Updated on
1 min read

தேனி, பிப். 1:தேனி மாவட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு வங்கிகள் கடன் வழங்க கால தாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் வீடுகளை கட்ட முடியாமல் சிரமப்படுவதாக பயனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    தேனி மாவட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கு 1,063 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இப் பயனாளிகளுக்கு அரசு தலா ரூ. 75 ஆயிரம் மானியம் வழங்கும் என்றும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மாறுபட்ட வட்டி விகிதக் கடன் (டி.ஆர்.ஐ. கடன்) வழங்கப்படும் என்றும், கடன் தொகையை 5 ஆண்டுகளில் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது. தற்போது 605 வீடுகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வங்கிக் கடன் கிடைக்காததால் மற்ற பயனாளிகள் வீடு கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

தேசிமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற 940 பயனாளிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பரிந்துரை செய்திருந்தது. இதில் 237 பயனாளிகளின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 113 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கடன் வழங்காமல் வங்கிகள் கால தாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பயனாளி ஒருவர் கூறியதாவது:கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் அரசு வழங்கும் மானியம் 200 சதுர அடி பரப்பளவு உள்ள வீடு கட்டுவதற்கு போதுமானதாக இல்லை. வங்கிக் கடன் வழங்குவதிலும் கால தாமதம் செய்யப்படுகிறது. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் மற்றும் பிணைய ஆவணம் வழங்குவோருக்கு மட்டுமே உடனடியாகக் கடன் வழங்கப்படுகிறது.

இதனால் வங்கிக் கடன் கிடைக்காமல் பயனாளிகள் பலர் வீடு கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர். வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு உடனடியாக வங்கிக் கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கூறியதாவது:மாறுபட்ட வட்டி விகிதக் கடன் திட்டத்தில் வங்கி கடன் வழங்குவது, பிணைய ஆவணம் பெறுவது ஆகியவை தொடர்பாக சில வங்கிகள் தலைமை அலுவலகத்தில் விளக்கம் பெறவேண்டியிருந்தது. தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்துப் பயனாளிகளுக்கும் கடன் வழங்க வங்கிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தொகுப்பு வீடு திட்ட பயனாளிகள் மற்றும் வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் லோன் மேளா நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com