அரசுப் பணியாளர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குளறுபடி!

மதுரை, ஜன. 4:  தமிழகத்தில் அரசுப் பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் தனியார் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டு, சிகிச்சை பெறுவதற்கான நிதியும் அளிக்கப்படுவதில்லை எனப் பரவலாகப் புகார
Updated on
2 min read

மதுரை, ஜன. 4:  தமிழகத்தில் அரசுப் பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் தனியார் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டு, சிகிச்சை பெறுவதற்கான நிதியும் அளிக்கப்படுவதில்லை எனப் பரவலாகப் புகார் எழுந்துள்ளது.

 திமுக அரசு பதவி ஏற்ற நிலையில், சென்னையில் நடைபெற்ற அரசுப் பணியாளர்கள் சங்க மாநாட்டில் அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் அறிவித்தார். அதன்படி "ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு' நிறுவனத்தின் மூலம் மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 இதன்மூலம், அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் மாதம் ரூ. 50-ஐ தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தவேண்டும்.

இத்திட்டத்தில் சேரும் அரசு ஊழியர் ஓராண்டு அல்லது இரண்டாண்டுகள் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சைகளை திட்டத்தில் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

 திட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட நோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை ரசீதுகள், பரிசோதனை ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனக் கடிதம் ஆகியவற்றை அந்த நிறுவனத்துக்கு அனுப்பிட வேண்டும். அதன்படி நிறுவனம் பணம் செலுத்தும்.

திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்கள் பணம் செலுத்தாமலேயே சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

  இத்திட்டத்தின் மூலம் சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களும், அவரது குடும்பத்தினரும் பயன்பெறுவர் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

 இத்திட்டத்துக்கான அடையாள அட்டைகளும் அரசுப் பணியாளர்களுக்கு  வழங்கப்பட்டன.

ஆனால், தற்போது இத்திட்டத்தில் முழுமையான மருத்துவச் சிகிச்சைக்கான நிதியை, தனியார் காப்பீட்டு நிறுவனம் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலரின் மனைவிக்கு கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள, மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 16.11.2010-ல் சேர்த்தனர். அவருக்கு அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. (அலுவலரின் ஸ்டார் ஹெல்த் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை எண்- ற்ய்ட்/01/ற்க்301/1082658.)

 ஆனால், ஸ்டார்ஹெல்த் நிறுவனத்திடமிருந்து சிகிச்சைக்கான பணம்  அளிக்கப்படவில்லை. இதனால், தனியார் மருத்துவமனைக்கு ரூ. 33,150 செலுத்தும் நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

 இதேபோல, மதுரை செனாய்நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் உதவி  ஆசிரியராகப் பணிபுரியும் உமாவுக்கும், தனியார் மருத்துவமனையில் கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவரும் ஸ்டார் ஹெல்த் திட்ட  அடையாள அட்டை வைத்துள்ளார். அவருக்கும் கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சைக்கு  ஒப்புதல் கிடைக்காததால், அவரும் சிகிச்சைக்கு உரிய கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

  இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவ அனைத்து ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.வெங்கடாசலம் கூறுகையில், ஸ்டார் ஹெல்த் திட்டத்துக்காக, மாதந்தோறும் அரசு ஊழியர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், அதன்படி சிகிச்சைக்கான முழு நிதியும் அளிக்கப்படுவதில்லை. இது ஏமாற்றமளிக்கிறது. இதுகுறித்து அரசு தெளிவான விளக்கத்தை அளிக்கவேண்டும் என்றார்.

 இதுகுறித்து மருத்துவர்கள் வட்டாரத்தில் கேட்டபோது, பெண்களுக்கு பெரும்பாலும் 35 வயதுக்கு மேலாகக் கருப்பை பிரச்னை ஏற்படுகிறது. ஆகவே கருப்பை நீக்க சிகிச்சை என்பது அதிகமாகவே நடைபெறுகிறது.

ஆனால், தனியார் காப்பீடு நிறுவனம் பல காரணங்களைக்கூறி, கருப்பை நீக்க சிகிச்சைக்கு நிதி அளிக்க மறுக்கிறது. இதுகுறித்து அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

 இதைத்தவிர, அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறும்போது, ஸ்கேன் உள்ளிட்டவற்றுக்கு அவர்களே பணம் செலுத்தவேண்டும்.

காப்பீட்டுத் திட்டத்தில் ஸ்கேன் சிகிச்சைக்கு நிதி அளிக்கப்படமாட்டாது என்றும் கூறப்படுவதாக, அரசு ஊழியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

 அரசு ஊழியர்களுக்கான தனியார் காப்பீட்டுத் திட்டம் குறித்து ஆரம்பத்திலேயே  சந்தேகம் எழுப்பப்பட்டது.

தற்போது அத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவன அலுவலர்களிடம் தொடர்புகொண்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com