ஆண்டிபட்டி, ஜூலை 14: ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கான இடத்தை, இந்து சமய அறநிலையத் துறை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இப்பகுதி மக்கள் கல்வி அறிவு பெறுவதற்காக, நகரின் மையப் பகுதியில் 60 சென்ட் நிலப் பரப்பில் நடுநிலைப் பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் உயர்நிலைப் பள்ளியாக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைப் பள்ளி யாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வஜ்ரவேல் குடும்பத்தினர், ரயில்வே கேட் அருகிலிருந்த தங்களுக்குச் சொந்தமான 65 சென்ட் இடத்தை பள்ளிக்குத் தானமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதனால், அந்த இடத்தில் புதிய வகுப்பறைகள் கட்டி, கடந்த 2005-ம் ஆண்டு முதல் மாணவிகள் சேர்க்கை துவக்கப்பட்டது. இதையடுத்து, ஆண்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் இங்கு வந்து சேரத் துவங்கினர். தற்போது, இப்பள்ளியில் 1,200 மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு வகுப்புகள் நடத்த போதிய இடவசதி இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
நகரின் முக்கியமான அதே நேரத்தில் அதிக மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளிக்கென தனி விளையாட்டு மைதானம் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. எனவே, இப்பள்ளியின் அருகில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான தரிசு நிலத்தை அனுமதி பெற்று, பள்ளி விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், திடீரென கோயில் நிர்வாகம், தங்களுடைய இடத்தை முன் அனுமதி இன்றி விளையாட்டு மைதானமாக பள்ளி நிர்வாகம் பயன்படுத்தி வருவதாக, வழக்குத் தொடர்ந்து இருக்கிறது.
இதையறிந்த பள்ளி நிர்வாகம், அறநிலையத் துறையினரை அணுகி, நகரின் மத்தியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான அதிக மதிப்பு கொண்ட கட்டடத்துடன் கூடிய இடத்தை, அறநிலையத் துறைக்கு எழுதித் தருவதாகவும், அதேபோல அறநிலையத் துறைக்குச் சொந்தமான தரிசு நிலத்தை பள்ளி நிர்வாகத்துக்கு பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என, 4 மாதங்களுக்கு முன் அறநிலையத் துறைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அதற்கு அறநிலையத் துறை பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வக்குமார் கூறியது:÷பள்ளி இடத்தை இந்து சமய அறநிலையத் துறைக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் ஒப்புக்கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் எழுதிக் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்து சமய அறநிலையத் துறை இதுவரை தனக்குச் சொந்தமான இடத்தை பள்ளிக்கு எழுதித் தரவில்லை. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வகுப்பறைகள் மற்றும் விளையாட்டு மைதானம் இல்லாமல் சிரமப்பட்டு வரும் இப்பள்ளி மாணவிகளின் நலன் கருதி, இதற்கு ஒரு தீர்வு ஏற்பட மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.