மதுரை, மார்ச் 5: மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் கீழுள்ள அரசு செவிலியர் கல்லூரிக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரூ.9.30 கோடியில் புதிய கட்டடம் கட்ட மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு செவிலியர்களுக்கான கல்லூரி கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் பி.எஸ்.சி. மற்றும் எம்.எஸ்.சி. செவிலியர் படிப்புக்காக மாணவியர் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
பி.எஸ்சி. செவிலியர் படிப்பில் ஆண்டுதோறும் 50 பேரும், எம்.எஸ்சி. செவிலியர் படிப்புக்கு ஆண்டுதோறும் 25 பேரும் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மொத்தத்தில் தற்போது 250 மாணவியர் செவிலியர் படிப்பை படித்துவருவதாக மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் கல்லூரிக்கு தனியாக கட்டடம் ஏதுமில்லை. ஆகவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்துக்குள் உள்ள கட்டடத்தில் செவிலியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு போதிய இடவசதியின்றியும், தண்ணீர் வசதி இன்றியும் மாணவியர் சிரமப்பட்டு வந்தனர். மேலும், இதனருகே செவிலியர் பள்ளியும் செயல்பட்டதால் செவிலியர் கல்லூரி மாணவியருக்கு தங்குமிடமின்றி வெளியில் தங்கும் நிலையும் ஏற்பட்டது.
மேலும், மத்திய மருத்துவக் குழு விதிமுறைப்படி செவிலியர் கல்லூரிக்கு தனியாக கட்டடம் இருந்தாலே அங்கீகாரம் அளிக்கமுடியும். ஆகவே தனி கட்டடம் இல்லாத காரணத்தால் அரசு செவிலியர் கல்லூரிக்கு மத்திய மருத்துவக் குழு அங்கீகாரம் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
மத்திய மருத்துவக் குழு அங்கீகாரத்தை கல்லூரி பெறாத காரணத்தால் இக்கல்லூரியில் பயின்று வெளியேறும் மாணவியர் வேலை தேடுவதில் சிக்கல் ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, செவிலியர் கல்லூரிக்குத் தனி கட்டடம் கட்ட நிதி கோரி, கடந்த 4 ஆண்டுகளாக மாநில சுகாதாரத் துறைக்கு மனு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் நிதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி டீனாகப் பொறுப்பேற்ற டாக்டர் எட்வின் ஜோ, செவிலியர் கல்லூரிக்கான புதிய கட்டடம் கட்ட நிதி கோரி சுகாதாரத் துறைக்கு திட்டத்தை அனுப்பினார். அதில் சேலத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரி கட்டடத்தை மாதிரியாகக் கொண்டு மதுரை அரசு செவிலியர் கல்லூரிக்கு கட்டடம் கட்டவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் உதவியுடன் செவிலியர் கல்லூரிக்கு தேவையான கட்டட நிதியை மாநில சுகாதாரத் துறையிடம் கேட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
நிதியைப் பெறுவதற்காக டாக்டர் லட்சுமி தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் தொடர்ந்தன. இதையடுத்து தற்போது மாநில மருத்துவ இயக்குநரகம் செவிலியர் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி மைதானத்தின் ஒரு பகுதியில் (பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில்) 23,720 சதுர அடியில் கல்லூரிக்கான அலுவலகம், வகுப்பறைகள் கட்டவும், அதனருகே 30,750 சதுர அடியில் சுமார் 300 மாணவியர் தங்கும் வசதியுடைய ஹாஸ்டல் கட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி மற்றும் ஹாஸ்டல் கட்டுவதற்காக சுமார் ரூ.9.30 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் ரூ.4.50 கோடியில் கல்லூரிக்கான அலுவலகம், வகுப்பறைகளும், ரூ.4.80 கோடியில் ஹாஸ்டல் அறைகளும் கட்டப்படும் என மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.
தரைத்தளம், இரு மேல்தளங்கள் என கட்டப்படும் கட்டடங்களில் ராஜஸ்தான் மார்பிள் பதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு உத்தரவிட்டதை அடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு செவிலியர் கல்லூரி கட்டடப் பணிகள் தொடங்கப்படும் எனவும் மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.