வைகை அணையில் படிந்துள்ள மணல், வண்டல் மண் அகற்றப்படுமா?

ஆண்டிபட்டி, நவ. 7: வைகை அணையில் படிந்துள்ள வண்டல் மற்றும் மணல் படிவுகளை அகற்றி, வைகை அணையின் பழைய நீர் கொள்ளளவுக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென
Updated on
2 min read

ஆண்டிபட்டி, நவ. 7: வைகை அணையில் படிந்துள்ள வண்டல் மற்றும் மணல் படிவுகளை அகற்றி, வைகை அணையின் பழைய நீர் கொள்ளளவுக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறட்சியை போக்க காமராஜர் முதல்வராக இருந்தபோது, வைகை ஆற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டி, அணையின் மூலம் வறட்சி காலங்களில் தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்குப் பயன்படுத்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அத் திட்டத்தின் படி, ஆண்டிபட்டிக்கு வடக்கே வைகை ஆற்றின் குறுக்கே 1958-ம் ஆண்டில் வைகை அணை கட்டப்பட்டது. அப்போது அணையின் முழு கொள்ளளவு 6879 மில்லியன் கன அடி (194.785 மில்லியன் கன மீட்டர்) ஆகும்.

இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் மற்றும் 45,000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதிபெற்று வந்தன.

இந்த நிலையில், அணையைக் கட்டி பல வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், அணையின் நீர் கொள்ளளவு குறைந்துவந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த போது, வைகை நீர்தேக்கத்துக்கு வரும் நீரின் மூலம் வண்டல் படிவுகள் மற்றும் கழிவுகளால் மண் படிவுகள் 10 அடி முதல் 20 அடி வரை உருவாகியிருந்ததாம்.

இதனையடுத்து, கடந்த 2000-ம் வருடம் பூண்டி நீரியியல் ஆராய்ச்சி நிலையம் வைகை அணையை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின்படி, வைகை அணையின் தற்போதைய கொள்ளளவு 5905 மில்லியன் கன அடி என்று ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தனர். இந்த ஆய்வின்படி அணையின் நீர் கொள்ளளவு 974 மில்லியன் கன அடி (27.579 மில்லியன் கன மீட்டர்), நீர்ப் பரப்பளவு 14.16 சதவீதம் குறைந்துள்ளது எனத் தெரியவந்தது.

இதனையடுத்து, மண் படிவுகளை அகற்ற சென்னையில் உள்ள வடிவமைப்பு மற்றும் கட்டுமான ஆதார மையத்தைச் சேர்ந்த தலைமைப் பொறியாளரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு மண் படிவுகளை அகற்றி, அணையின் நீர் மட்டத்தை முழுமையான கொள்ளளவுக்குக் கொண்டு வர ஆய்வு நடத்தின. ஆய்வின் படி, இரண்டு திட்டங்களை பொதுப்பணித் துறை அரசின் முதன்மைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தது.

1. போட்டிங் முறை - அதாவது, நீரில் மிதக்கும் இயந்திரத்தின் மூலம் அடிப்பகுதியில் உள்ள வண்டல் மண் படிவுகளை எடுத்து, பைப் லைன் மூலம் 5 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு சென்று அங்கு வண்டல் மண் மற்றும் மணலை தனியாகப் பிரித்தெடுக்கலாம் என்றும், இத் திட்டத்துக்கு அதிகம் செலவாகும் என்றும் கூறப்பட்டது.

2. தண்ணீர் குறையும்போது பொக்லைன் இயந்திரத்தின் மூலம் வண்டல் மண் மற்றும் மணலைப் பிரித்து எடுக்கலாம் என்றும், இம் முறையின் மூலம் தூர்வாரினால் 221.40 கோடி செலவாகும் என்றும், இதன் மூலம் செலவு குறைவு என்றும் கூறப்பட்டது.

அணையின் கொள்ளளவை பழைய நிலைக்குக் கொண்டு வர 27.579 மில்லியன் கன மீட்டர் அளவு வண்டல் மண்ணைத் தூர் வார வேண்டும். மேற்படி, வண்டல் மண்ணை விவசாயப் பணிகளுக்கு இலவசமாக வழங்கலாம் என்றும், இதன் மூலம் கிடைக்கும் மணலை கட்டடப் பணிகளுக்கு விற்பனை செய்யலாம் என்றும், வண்டல், சவுடு மண்களை செங்கல் காளவாசல்களுக்கு விற்பனை செய்யலாம் என்றும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

974 மில்லியன் கன அடி நீரைத் தேக்குவதற்கு அணை ஒன்றைக் கட்ட வேண்டுமானால் ரூ. 1500 கோடி வரை செலவு ஆகும். ஆனால், வைகை அணையைத் தூர்வாருவதன் மூலம் 250 கோடி ரூபாய் அளவில்தான் செலவு ஆகும் என்றும் பொறியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இத் திட்டம் கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து விவாதிக்கப்பட்டு, ஆய்வு நிலையிலேயே இருந்து வருகிறது. எனவே, தமிழக அரசு தென் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணையைத் தூர்வாரி, பழைய கொள்ளளவு நிலையை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com