தேனி, நவ. 20: தேனியில் சிதிலமடைந்துவரும் கட்டடத்தில், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் செயல்பட்டுவரும் சித்த மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. மூட்டு வலி, முதுகு வலி, வாத நோய், தோல் நோய், கல்லடைப்பு, மூலம், அலர்ஜி, வயிற்று உபாதை ஆகிய நோய்களுக்கும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றுக்கும் சிகிச்சை பெறுவதற்கு சித்த மருத்துவப் பிரிவுக்கு அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கும், உடல் பருமனைக் குறைப்பதற்கும் சித்த மருத்துவப் பிரிவில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளுக்கு நீராவி பிடித்தல், மசாஜ், ஸ்டீம்பாத், டிரட்மில், பிசியோதெரபி சிகிச்சைகள் அளிப்பதற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.
நோய் தடுப்பு மருந்துகளாக மூலிகை, கஷாயம், பஸ்பம், செந்தூரம் மருந்துகள் வழங்கப்படுகின்றன. வாழ்வியல் முறை மற்றும் உணவுப் பழக்கவழக்க மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுவதால், சித்த மருத்துவத்தில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேனியில் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் சராசரி 50 பேர் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். தேனியில் செயல்பட்டுவந்த அரசு மருத்துவமனை கடந்த 2004-ம் ஆண்டு க.விலக்குக்கு மாற்றம் செய்யப்பட்டதற்குப் பின்னர், பராமரிப்பின்றி சிதிலமடைந்துவரும் பழைய மருத்துவமனை வளாகத்தில், புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு ஆகியவை மட்டும் செயல்பட்டு வருகின்றன.
சித்த மருத்துவப் பிரிவுக்கு மருத்துவர் அறை மற்றும் மருந்தகம் ஆகியவற்றுக்கு மட்டும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருந்தகத்தில் மருந்து, மாத்திரைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்படவில்லை. மழை மற்றும் வெயில் காலத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள விலை உயர்ந்த மருந்துகள் வீணாகும் வாய்ப்பு உள்ளது.
சித்த மருத்துவ சிகிச்சை பெறுவதில் பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் இருந்தாலும், பராமரிப்பில்லாத கட்டடத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனைக்கு வந்துசெல்ல நோயாளிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
சித்த மருத்துவப் பிரிவுக்கு செல்லும் நோயாளிகள் ரத்தம், சிறுநீர், எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்கு க.விலக்கில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று வர வேண்டியுள்ளது. தேனியில் பராமரிப்பில்லாத பழைய அரசு மருத்துவமனை வளாகத்தைச் சீரமைத்து, சித்த மருத்துவச் சிகிச்சைப் பிரிவுக்கு போதிய இட வசதி செய்து தரவும், மத்திய அரசு நிதியைப் பயன்படுத்தி அரசு சித்த மருத்துவப் பிரிவை மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் முனியப்பனிடம் கேட்டபோது, தேனி சித்த மருத்துவமனையில் வசதி குறைபாடுகள் உள்ளது குறித்து இதுவரை புகார்கள் எதுவும் வரவில்லை. மருத்துவமனையைப் பார்வையிட்டு, தேவையான வசதிகள் அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். தேனி பழைய மருத்துவமனை வளாகத்தைச் சீரமைத்து, சிறப்பு மனநல மருத்துவமனை அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.