மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளிகள்

ஆண்டிபட்டி, செப். 16:÷தேனி மாவட்டம், கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியத்துக்கு உள்பட்ட காந்திகிராமம் (படம்), பொம்மராஜபுரம் அரசு ஆரம்பப் பள்ளிகள், மாணவர்கள் வருகை குறைந்ததால் செயல்படாமல் உள்ளன. இந்தப் பள்ளிகள
Updated on
1 min read

ஆண்டிபட்டி, செப். 16:÷தேனி மாவட்டம், கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியத்துக்கு உள்பட்ட காந்திகிராமம் (படம்), பொம்மராஜபுரம் அரசு ஆரம்பப் பள்ளிகள், மாணவர்கள் வருகை குறைந்ததால் செயல்படாமல் உள்ளன. இந்தப் பள்ளிகளை மீண்டும் செயல்படுத்த கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

÷கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் 2006-ல் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் காந்திகிராமம், பொம்மராஜபுரம், தாண்டியக்குளம், பண்டாரஊத்து, மஞ்சனூத்து, இந்திராநகர் ஆகிய மலைக் கிராமங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

÷இந்தப் பள்ளிகள் அனைத்தும் 2007-ல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தலா ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

÷இந்த நிலையில், 2010-2011 கல்வி ஆண்டில் காந்திகிராமத்தில் உள்ள பள்ளியில் மாணவர்களின் வருகை குறைந்தது. இதையடுத்து 2011-2012 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இந்தப் பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் கேசவன், உப்புத்துறையில் உள்ள பள்ளிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

÷30 மாணவர்கள் மட்டுமே படிக்கும் உப்புத்துறை பள்ளியில் ஏற்கெனவே ஒரு தலைமை ஆசிரியர் பணியில் உள்ளார். தற்போது 2 பேர் அங்கு தலைமை ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர்.

÷இதேபோல, பொம்மராஜபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியிலும் மாணவர் வருகை குறைந்ததால், அங்கு பணியாற்றிய தலைமை ஆசிரியை ரேகா, அரசரடியில் உள்ள பள்ளிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து 35 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியிலும் தற்போது 2 தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்.

÷அதே சமயம், மலைக் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் முறுக்கோடை மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். அந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மீண்டும் காந்திகிராமம், பொம்மராஜபுரத்தில் பள்ளிகளைச் செயல்படுத்த கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியில் உள்ள கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இதுகுறித்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தமிழன் கூறியது:÷இந்தப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை இல்லாததால், இங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியர்களை வேறு பள்ளிக்குக் கூடுதல் பணிக்கு அனுப்பிவைத்துள்ளோம்.

÷ஆசிரியர் பணியிட மாற்றத்துக்கான கலந்தாய்வின்பேது, அவர்கள் வேறு பள்ளிகளுக்குத் தலைமை ஆசிரியர்களாக சென்றுவிடுவர். காந்திகிராமம், பொம்மராஜபுரம் கிராமத்தினர் மாணவர்களை, அங்குள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்தால் மீண்டும் ஆசிரியர்களை நியமித்து பள்ளிகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com