பாகனேரி தியாகி எஸ்.ஓ.எஸ்.பி. உடையப்பா 108-வது ஜயந்தி

சிவகங்கை, டிச. 31: மகாத்மா காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர் விடுதலைப் போராட்ட தியாகி பாகனேரி எஸ்.ஓ.எஸ்பி. உடையப்பா என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர்

சிவகங்கை, டிச. 31: மகாத்மா காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர் விடுதலைப் போராட்ட தியாகி பாகனேரி எஸ்.ஓ.எஸ்பி. உடையப்பா என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

ஒருங்கிணைந்த ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராகவும், சென்னை மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்த அமரர் தியாகி பாகனேரி எஸ்.ஓ.எஸ்பி. உடையப்பா நினைவு 108-வது ஆண்டு ஜயந்தி விழா சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு பேசியது:

சிவகங்கை மாவட்டத்தின் தற்போதைய பெருமைக்கு அடித்தளமிட்டவர் உடையப்பா. அவர் காந்தி, நேரு, சத்தியமூர்த்தி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், ராஜாஜி, ஜீவானந்தம், ராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் என்றார். முன்னாள் அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் விழா சிறப்பு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். அவர் கூறுகையில், மக்களோடு நீண்ட நெருங்கிய தொடர்பு கொண்டது பாகனேரி பகுதி. அங்கு பிறந்த உடையப்பாவால் பரமக்குடி - இளையான்குடி இடையே கட்டப்பட்ட பாலத்துக்கு அவரது பெயரே நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நானும், ஜி.கே.வாசனும் இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் எடுத்துக்கூறுவோம் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன், அமரர்கள் பில்லப்பா-உடையப்பா அறக்கட்டளை தொடக்கி வைத்துப் பேசுகையில் பரமக்குடி-இளையான்குடி இடையே பாலம் கட்டி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வழி செய்து கொடுத்தவர் உடையப்பா. தங்க ராட்டையை காந்திக்கு பரிசாக அளித்த உடையப்பா அந்த ராட்டை மீண்டும் ஏலத்துக்கு வந்தபோது அதை தானே மீண்டும் ஏலத்தில் எடுத்து அதை தனது வீட்டில் பத்திரமாக வைத்தார் என்றார்.

முன்னதாக உ.பில்லப்பன் வரவேற்றார். விழாக்குழு தலைவர் ஆர்.வேங்கடகிருஷ்ணன் அறிமுக உரை நிகழ்த்தினார். கதர், கிராம கைத்தொழில் வாரிய செயலர் மற்றும் தமிழ்நாடு அரசு திட்டக்குழு உறுப்பினர் கே.லெட்சுமிகாந்தன் பாரதி தலைமை உரையாற்றினார்.

புதிதாக தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்கு ஜி.கே.வாசன் ரூ. ஒரு லட்சமும், எஸ்.திருநாவுக்கரசர்  ரூ. 50 ஆயிரமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.சுப்பையா அம்பலம் ரூ. ஒரு லட்சமும் தருவதாக மேடையில் அறிவித்தனர்.

திருவாடானை எம்எல்ஏ கே.ஆர்.இராமசாமி, சிவகங்கை எம்எல்ஏ எஸ்.குணசேகரன், முன்னாள் எம்எல்ஏ கே.பாரமலை உள்ளிட்டோர் பங்கேற்றுப்

பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com