மரபு சாரா எரிசக்தி துறை சார்பில் மானியம் வழங்கப்படுமா?

தேனி, ஏப். 8: தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்குவது போல, விவசாயக் கிணறுகளில் சோலார் சக்தி நீர் இறவை மோட்டார் பம்புகள் அமைப்பதற்கு மரபு சாரா எரிசக்தி துறை சார்பில் அரசு மானியம் வழங்க
Updated on
2 min read

தேனி, ஏப். 8: தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்குவது போல, விவசாயக் கிணறுகளில் சோலார் சக்தி நீர் இறவை மோட்டார் பம்புகள் அமைப்பதற்கு மரபு சாரா எரிசக்தி துறை சார்பில் அரசு மானியம் வழங்க வேண்டும் என்று விசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இறவை பாசன கிணறுகள் உள்ளன. இறவை பாசன கிணற்று நீரை பயன்படுத்தி நெல், கரும்பு மற்றும் தோட்டப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்ச சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து வருவதால், ஆறுகளில் நீர் வரத்து இன்றியும், கண்மாய்கள் வறண்டும் காணப்படுவதால், நிலத்தடி நீர் மட்டம் ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக சரிந்து வருகிறது.

விவசாய மோட்டார் பம்புகளுக்கு மின் வாரியம் மூலம் தினமும் 5 அல்லது 6 மணி நேரம் மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது நிலவி வரும் மின் தடையால், தினமும் 2 மணி நேரம் மட்டுமே மின் விநியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாய பயன்பாட்டுக்கு குறைந்த நேரம் மட்டும் மின் விநியோகம் வழங்குவதால் பல்வேறு வகையில் விவசாய பணிகள் மற்றும் உற்பத்தி பாதிக்கிறது.

மின்வெட்டால், சொட்டுநீர் பாசன விவசாயத்துக்கும் கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், உற்பத்திச் செலவுக்கு கூட கட்டுப்படியாகாமல் சிரமப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

உற்பத்தி குறைவால் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

மாற்று எரிபொருள்:

விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு ரூ.25 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்துபவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு பின்பும், ரூ.50 ஆயிரம் செலுத்துபவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பின்பும் மின் வாரியம் சார்பில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

மின் மாற்றி உள்ள இடத்துக்கு ஏற்ப மின் கம்பம் அமைப்பது உள்ளிட்ட செலவினங்களுக்கு விவசாயிகள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். விவசாய பயன்பாட்டுக்கு வழங்கும் மின் இணைப்புகளுக்கு வணிக பயன்பாட்டுக்கான டேரிப் அடிப்படையிலேயே மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

விவசாய பயன்பாட்டுக்கு பல ஆண்டுகள் காத்திருந்து மின் இணைப்பு பெறும் விவசாயிகள், தற்போது நிலவி வரும் மின் வெட்டால் அதிருப்தியில் உள்ளனர். மின் தட்டுப்பாட்டால் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

தற்போது நிலவி வரும் மின் வெட்டு படிப்படியாக சில மாதங்களில் சீராகும் என்று அரசு தெரிவித்தாலும், மின் வெட்டு, மின் கட்டண உயர்வு, மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வாக, விவசாய பாசன கிணறுகளில் சோலார் சக்தி தண்ணீர் இறவை பம்பு அமைப்பதற்கு மரபு சாரா எரிசக்தி துறை சார்பில் மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கண்ணன், செயலர் என்.சுருளிநாதன் ஆகியோர் கூறியது: சோலார் சக்தி தண்ணீர் இறைவை பம்பு அமைப்பதற்கான நிர்மாணச் செலவு அதிகமாக இருந்தாலும், இது மின்சார பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.

சோலார் சக்தியை பயன்படுத்தி தெரு விளக்கு, அடுப்பு, தண்ணீர் கொதிக்க வைக்கும் கருவி அமைப்பதற்கும், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சோலார் சக்தியை பயன்பாட்டுத்துவதற்கும் மரசு சாரா எரிசக்தி துறை சார்பில் அரசு மானியம் வழங்குகிறது.

விவசாய உற்பத்திப் பொருள்களின் முக்கியத்துவம் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி பாசன கிணறுகளில் சோலார் சக்தி இறவை பம்பு அமைப்பதற்கு 50 சதவிகிதம் மானியம் வழங்க அரசு முன் வரவேண்டும். விவசாயம் சார்ந்த பண்ணை தொழிலுக்கும் இது உதவியாக இருக்கும் என்றார்.

இது குறித்து தேனி மாவட்ட தோட்டக் கலை அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மரபு சாரா எரிசக்தி துறை அலுவலர்களிடம் கேட்டதற்கு, விவசாய பாசன கிணறுகளில் சூரிய சக்தியை பயன்படுத்தி தண்ணீர் இறவை மோட்டார் பம்பு அமைப்பதற்கு அரசு சார்பில் மானியம் வழங்கும் திட்டம் இல்லை என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com