மதுரை, பிப். 6: அரைகுறைத் தகவல்களுடன் உள்ளதால் மதுரையில் வாக்காளர் அடையாள அட்டையை சம்பந்தப்பட்டவர்களுக்கு விநியோகிக்க முடிவதில்லை என மாநகராட்சி ஊழியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் அடையாள அட்டைகள் பல கட்டங்களாக வழங்கப்பட்டு வருகின்றன. தேர்தலில் கள்ள வாக்குகளைத் தவிர்க்கும் வகையில், புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
வாக்காளர் புகைப்படம், முகவரி, பிறந்ததேதி என பல தகவல்களுடன் அடையாள அட்டை இருப்பதால், பாஸ்போர்ட் பெறுவது முதல், வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்குவது வரையில், அனைத்து பயன்பாட்டிற்கும் அவை பயன்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமீபகாலமாக மதுரை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை தயாரிப்பில், சம்பந்தப்பட்ட துறையினர் போதிய கவனம் செலுத்தாமல் அரைகுறைத் தகவல்களுடன் அட்டைகளைத் தயாரித்து அளிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
மதுரை நகரில் அரசரடி பகுதியில், சமீபத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகிக்கும்படி, ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மாநகராட்சி அலுவலர்களிடம் அளித்துள்ளனர்.
ஆனால், அந்த வாக்காளர் அடையாள அட்டைகளில் பிறந்ததேதி முழுமையாக இல்லை. மேலும் முகவரியும் முழுமையாக இல்லை. அதாவது 15, அரசரடி, மதுரை மேற்கு என ஒரு வாக்காளர் முகவரி அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற அரைகுறைத் தகவல்களுடன் இருக்கும் அடையாள அட்டையை எப்படி உரிய வாக்காளரிடம் சேர்ப்பிக்க முடியும்? என மாநகராட்சி அலுவலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
வாக்காளர் பெயர், கதவு எண், வீதி, குறுக்குத்தெரு எண் என முழுமையாக முகவரி இருந்தாலே எளிதில் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படும் நிலையில், எந்தவித விவரமும் இல்லாமல் அடையாள அட்டையை வாக்காளர்களிடம் விநியோகியுங்கள் என்றால் எப்படி முடியும்? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
அரைகுறை தகவல்களுடன் அடையாள அட்டைகள் இருப்பதால், வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அரைகுறை அடையாள அட்டை உள்ளவர்கள், பாஸ்போர்ட்டுக்கு மீண்டும் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியரிடம் முகவரி சான்றும் பெறவேண்டியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
தேசிய அடையாள அட்டை
மதுரை மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படும் எடுக்கும் பணிகள் நடந்துவருவதாக அறிவிக்கப்பட்டது.
மதுரை குட்ஷெட் தெரு உள்ளிட்ட இடங்களில் தனியார் நிறுவனம் மூலம் ஒவ்வொருவரின் கைரேகைகள், கண் விழி, முகம் பதிவு செய்யப்பட்டு அதன்படி அடையாள அட்டைகள் தரப்பட்டு வருகின்றன.
தேசிய அடையாள அட்டை அடிப்படையிலே, தமிழகத்தில் குடும்ப அட்டையும் புதுப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய அடையாள அட்டையும் தற்போது முறையாக வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
சுமார் 10 செ.மீட்டர் நீளத்தில் வழங்கப்படும் இந்த அடையாள அட்டை மிக மெல்லியதாக இருப்பதால், அவற்றை எங்கும் எளிதில் கொண்டு செல்லமுடியாததாக இருப்பதுடன், சீக்கிரம் கிழியும் வகையிலும் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
அத்துடன், அந்த அட்டையிலும் ஆண், பெண் பாலினம் மாறியும் முகவரியை மாற்றியும் அச்சடித்துள்ளனர்.
குடும்பத்தில் 4 பேர் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்திருந்தால், அவர்களில் இருவருக்கு மட்டுமே தபால் மூலம் தேசிய அடையாள அட்டை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கான அடையாள அட்டை குறித்து சரியான தகவல்கள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தால் தெரிவிக்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
அரசு நிதி வீணாகலாமா?
பலவித பயன்பாட்டுக்காக பல கோடி ரூபாய் செலவழித்து செயல்படுத்தப்படும் அடையாள அட்டைத் திட்டத்தில் சம்பந்தப்பட்ட துறையினர் சரியாக கவனம் செலுத்தாமல், ஆயிரக்கணக்கான அட்டைகளை அரைகுறையுடன் விநியோகிப்பது சரியானதுதானா? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.