ஆண்டிபட்டி,பிப்.10: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலாத் தலமான சின்ன சுருளி நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சுற்றுலாத் தலமாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்ன சுருளி நீர்வீழ்ச்சி மேக மலை அடர்ந்த வனப்பகுதியில் உருவாகி பல அரிய வகை மூலிகைகள் கலந்து வருவதால் மருத்துவ குணம் நிறைந்த நீர்வீழ்ச்சியாக உள்ளது. இந் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
தரமான சாலை இல்லை:
தேனியிலிருந்து கடமலைக்குண்டு, குமணன் தொழு வழியாக செல்லவேண்டும். கடமலைக்குண்டில் இருந்து குமணன் தொழுவிற்கு செல்லும் சாலை சேதமடைந்து மோசமாக இருக்கிறது. குமணன் தொழுவிலிருந்து அருவிக்கு செல்லும் மண் பாதை மழையால் சேதமடைந்து மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் ஒரு கிலோமீட்டருக்கு முன்னால் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து தான் செல்லவேண்டும். சாலைகளை சீர்படுத்தி தரமான சாலை அமைக்கவேண்டும்.
போக்குவரத்து வசதி இல்லை:
தேனியிலிருந்து சின்ன சுருளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல 40 கி.மீ மேல் செல்லவேண்டும். தேனியிலிருந்து நீர்வீழ்ச்சிக்கு செல்ல நேரடியாக பேருந்து வசதி இல்லை. வெள்ளிமலைக்கு செல்லும் பேருந்தில் சென்று கோம்பைத்தொழுவில் இறங்கி 5 கீ.மீ தூரம் நடந்துதான் செல்லவேண்டும். இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு சென்றுவர தேனியிலிருந்து நேரடி பேருந்துகளை இயக்க நடவடிக்கை வேண்டும்.
குளிப்பதற்கு இடம்:
பெரிய அருவியில் செங்குத்தான பாறைகள் இருப்பதால், அருவியில் பொதுமக்கள் குளிக்கமுடியாத நிலை உள்ளது. இதனால் மேலே உள்ள தடை செய்யப்பட்ட நீர்வீழ்ச்சியில் சென்று குளிக்கின்றனர். இதனால் இங்கிருந்து எடுக்கப்படும் 18 கிராமங்களின் குடிநீர் மாசடையும் நிலை உள்ளது.
மேலும் பெரிய அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு ஏற்றவாறு பாறையை வெட்டி (பெரியகுளம் கும்பக்கரை நீர் வீழ்ச்சியில் இருப்பது போன்று) சீர்படுத்தினால் பொதுமக்கள் மேலே உள்ள அருவியில் சென்று குளிப்பது தவிர்க்கப்படும்.
பாதுகாப்பு:
பொதுமக்கள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமான இங்கு போலீஸ் பாதுகாப்பு கிடையாது. இதனால் மதுபான பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை ஆங்காங்கே போட்டு உடைக்கின்றனர். எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கு நிரந்தரமாக காவலர்களை நியமிக்க வேண்டும்.
அரசு விழா:
சுருளி தீர்த்தம், மேகமலை ஆகிய சுற்றுலாத் தலங்களில் நடப்பது போன்று அரசு விழாக்கள் நடத்தி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதுகுறித்து மேகமலை வனச்சரகர் குகனேஷ் கூறியதாவது: குமணன்தொழு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு அருவியின் நீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு குடிநீர் வடிகால்வாரியம் ஆய்வு செய்துள்ளது. வனத்துறையின் சுற்றுலாத் திட்டம் மூலம் சின்ன சுருளி நீர்வீழ்ச்சியை சுற்றுலாத் தலமாக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.