மின் வசதியில்லாத மலை கிராமங்கள் காட்சிப் பொருளாகும் அரசின் விலையில்லா பொருள்கள்

தேனி, ஜன. 27:  தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அகமலை, கண்ணக்கரை ஆகிய மலை கிராமங்களில் அரசு சிறப்புத் திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறிகள்
Updated on
2 min read

தேனி, ஜன. 27:  தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அகமலை, கண்ணக்கரை ஆகிய மலை கிராமங்களில் அரசு சிறப்புத் திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறிகள் பயன்படுத்த முடியாமல் காட்சிப் பொருளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் அரசு சிறப்புத் திட்டத்தில் பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக ஊராட்சிப் பகுதிகளில் பயனாளிகளைத் தேர்வுசெய்து, விலையில்லா பொருள்கள் வழங்கப்படுகின்றன. போடி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் 4 கட்டமாக பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.   போடி ஒன்றியம், அகமலையில் கடந்த ஜன.21 (சனிக்கிழமை) மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் அகமலை ஊராட்சிக்கு உள்பட்ட கண்ணக்கரை, ஊரடி, ஊத்துக்காடு, அண்ணாநகர், சொக்கனலை ஆகிய மலை கிராமங்களைச் சேர்ந்த 587 குடும்பத்துக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கினார்.

    பெரியகுளத்தில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள அகமலை ஊராட்சிக்கு உள்பட்ட மலை கிராமங்களில் 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இல்லை.

சொக்கனலை, அகமலை ஆகிய கிராமங்களில் மட்டும் சில குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் தெருக்களில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் சோலார் விளக்குகள் அமைத்து, பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வனப் பகுதிகள் குறுக்கீடு, தூரம், செலவு ஆகியவை கருதி மலை கிராமங்களுக்கு மின் வசதி செய்து தர மின் வாரியம் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில்,  மின் வசதியில்லாத மலை கிராம மக்களுக்கு அரசு வழங்கியுள்ள விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறிகள் பயன்படுத்த முடியாமல் காட்சிப் பொருளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச தொலைக் காட்சிப் பெட்டிகளும் தற்போது வரை பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.   

   மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் பெற்ற விவசாயிகள் சிலர், அவற்றை பெரியகுளம், போடி பகுதியில் உள்ள தங்களது வீடுகளுக்குக் கொண்டு சென்று பயன்படுத்த உள்ளதாகக் கூறினர்.

     மின் வசதியில்லாத மலை கிராம மக்களுக்கு விலையில்லா மின் சாதனப் பொருள்கள் வழங்குவதற்கு பதில், மாற்றுப் பொருள்களை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

   இதுகுறித்து அகமலை ஊராட்சித் தலைவர் ரஞ்சித் பிரபு கூறியதாவது: குடும்ப அட்டைகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு வழங்கியுள்ள விலையில்லா பொருள்களைப் பயன்படுத்தவும், குழந்தைகளின் கல்வி நலன் கருதியும் அகமலை ஊராட்சிக்கு உள்பட்ட மலை கிராமங்களுக்கு மின்சாரம் மற்றும் சாலை வசதி செய்து தர வேண்டும் என்று நிதியமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com