ஊரக சமுதாய விளையாட்டு மைதானங்கள் சீரமைக்கப்படுமா?

தேனி, ஜூலை 1: தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், ஊராட்சிகளில் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஊரக சமுதாய விளையாட்டு மைதானங்களை சீரமைத்து பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக
Updated on
2 min read

தேனி, ஜூலை 1: தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், ஊராட்சிகளில் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஊரக சமுதாய விளையாட்டு மைதானங்களை சீரமைத்து பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும், கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆர்வத்தை ஏற்படுத்தவும், பயிற்சி செய்யவும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், தலா ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் செலவில் சமுதாய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 இந்தத் திட்டத்தின் கீழ், சில ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் புதிய விளையாட்டு மைதானம் அமைத்தல், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 சமுதாய விளையாட்டு மைதானங்களில் கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பந்து, வலை, மட்டை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், கேரம், சதுரங்கம் ஆகிய உள்விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டு மைதான பராமரிப்புக்கு ஊராட்சி நிதியில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 ஆயிரம் வரை செலவிட அரசு அனுமதி வழங்கி உள்ளது.

 இந்த விளையாட்டு மைதானங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சமத்துவ விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

 கிராமப்புற மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், காவல்துறை, ராணுவப் பணி ஆகியவற்றுக்குச் செல்ல பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்கள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு மைதானங்கள், தற்போது பெரும்பாலான இடங்களில் முறையான பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கின்றன.

 விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும் உடைந்தும் காணப்படுகின்றன. விளையாட்டு மைதானத்தை முறையாக பராமரிக்கவும், தேவையான உபகரணங்களை வழங்குவதற்கும் ஊராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டாததால் இந்த திட்டத்துக்காக செலவிடப்பட்டுள்ள அரசு நிதி வீணாகியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 பல இடங்களில் திட்ட நிதியை குறிப்பிட்ட காலத்துக்குள் செலவிட வேண்டும் என்பதற்காக, முறையான திட்டமிடாமல் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளிலும், குடியிருப்புகளை விட்டு வெகு தூரத்திலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு பயன்படவில்லை என்று கூறப்படுகிறது.

 இதுகுறித்து ஊராட்சிப் பணியாளர்கள் சிலர் கூறியது: விளையாட்டு மைதானத்தை பராமரிப்பதற்கு, அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஊராட்சி பொதுநிதியில் இருந்து செலவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, துப்புரவுப் பணி, அடிப்படை வசதிகளுக்கான பணிகள், ஊதியச் செலவினம் ஆகியவற்றுக்கே நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், பொதுநிதியில் இருந்து விளையாட்டு மைதானத்துக்கு பணம் செலவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

 சமுதாய விளையாட்டு மைதானங்களை சீரமைத்து முறையாக பராமரிக்கவும், விளையாட்டுக் குழுக்கள் அமைத்து தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும், மைதான பராமரிப்புக்கு தனியாக பணியாளரை நியமிக்கவும், விளையாட்டு மைதான பராமரிப்பு நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com