தேனி, ஜூன் 3: தேனியில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சாலையைக் கடந்து செல்வதற்கு சிரமப்படும் பொதுமக்களின் நலன் கருதியும், விதிமுறையை மீறி இயக்கப்படும் மினி பஸ் மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்த, மாவட்டக் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனியில் மும்முனை சந்திப்புச் சாலைகளான பெரியகுளம், மதுரை, கம்பம் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது.
நேரு சிலை அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலை கடந்து செல்ல வாகன ஓட்டிகளும், சாலையைக் கடந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
நேரு சிலை போக்குவரத்து சிக்னல் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், கம்பம் நெடுஞ்சாலையில் பழனிசெட்டிபட்டி வரையும், பெரியகுளம் நெடுஞ்சாலையில் அல்லிநகரம் வரையும், மதுரை நெடுஞ்சாலையில் பெரியகுளம் புறவழிச் சாலை சந்திப்பு வரையும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
விதிமீறல்களால் குளறுபடி:
நகரில் போக்குவரத்து மற்றும் காவல்துறை விதிமுறைகளை மீறி இயக்கப்படும் மினி பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டும் நிறுத்தாமல், பல இடங்களில் மினி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வது, 4-க்கும் மேற்பட்ட மினி பஸ்களை, ஓரே இடத்தில் நிறுத்தி வைத்து சாலையை ஆக்கிரமித்துக் கொள்வது, போக்குவரத்து நெரிசல் மிகுந்த கம்பம் நெடுஞ்சாலை கொட்டகுடி பாலம் முன்பு, மினி பஸ்களை திருப்பி போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைப்பது, நேர நிர்ணயமின்றி சரக்கு வாகனங்களை சாலையில் நிறுத்தி வைத்து சரக்குகளை ஏற்றி இறக்குவது, கட்டுப்பாடு இல்லாத ஆட்டோக்களின் இயக்கம் ஆகியவற்றால் போக்குவரத்து குளறுபடி மற்றும் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
நடை மேடை ஆக்கிரமிப்பு:
பெரியகுளம் நெடுஞ்சாலையில் பாரத ஸ்டேட் வங்கி வரையும், கம்பம் நெடுஞ்சாலையில் கொட்டுகுடி ஆற்றுப் பாலம் வரையும், மதுரை நெடுஞ்சாலையில் பங்களாமேடு வரையும் இடைவிடாத போக்குவரத்துக்கு நடுவே சாலையை கடந்து செல்வதற்கு பொதுமக்கள் நீண்டநேர நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
மதுரை நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடுப்புச் சுவருக்கு இடையில் காவல் துறையினர் அமைத்துள்ள தடுப்பு கம்பியால், சாலையைக் கடப்பதற்கு நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடை மேடை, பின்புறம் உள்ள கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், நடை மேடையில் இருந்து இறங்கி சாலைக்குச் செல்வதற்கு பாதை இல்லாததாலும் பொதுமக்கள் நடை மேடையை பயன்படுத்த முடியவில்லை.
நடைமேடையை அடுத்துள்ள பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், சாலையில் வாகனங்களுக்கு நடுவே பொதுமக்களும் நடந்து செல்கின்றனர்.
போதிய எண்ணிக்கையில் போக்குவரத்து போலீஸôர், போக்குவரத்து தானியங்கி சிக்னல்கள் இல்லாத நிலையில், நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க திட்டச் சாலைகளை திறக்கவும், நடை மேடை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மினி பஸ், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களை இயக்கத்தை முறைப்படுத்தி தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், நேருசிலை அருகே பெரியகுளம், மதுரை, கம்பம் நெடுஞ்சாலைகளில் பொதுமக்கள் சாலையைக் கடந்து செல்வதற்கு இடம் ஒதுக்கித் தரவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, தேனி நகர்மன்றத் தலைவர் எஸ். முருகேசனிடம் கேட்டதற்கு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, திட்டச் சாலைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து, நகர்மன்றத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.