புதுப்பொலிவு பெறுமா விரகனூர் அணை பூங்கா?

மதுரையை அடுத்த விரகனூரில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மதகு அணை பகுதியில் உள்ள பூங்காவை நவீனப்படுத்த அரசின் நிதியை எதிர்பார்த்து  பொதுப்பணித் துறை காத்திருக்கிறது.
Updated on
1 min read

மதுரையை அடுத்த விரகனூரில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மதகு அணை பகுதியில் உள்ள பூங்காவை நவீனப்படுத்த அரசின் நிதியை எதிர்பார்த்து  பொதுப்பணித் துறை காத்திருக்கிறது.

 இந்த மதகு அணை 1975 இல் கட்டி முடிக்கப்பட்டது. அணைக்கட்டுக்கு அருகே ஏறத்தாழ மூன்றரை ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மதுரை நகர வாசிகளுக்கு பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக இந்த பூங்கா  இருந்துள்ளது.

 காலப்போக்கில் வைகையில் தண்ணீர் வரத்து நின்று போனது ஒருபுறம் இருக்க,  பூங்காவும் பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்டது.

 மலர் செடி, கொடிகளுடன் இருந்த பூங்கா, முள்செடிகள் சூழ்ந்த பகுதியாகிவிட்டது.

 விளையாட்டு உபகரணங்கள்,  சிமெண்ட் நாற்காலிகள் உடைந்துபோய்விட்டன. நாளடைவில் மின்விளக்கு வசதியும் இல்லாமல் போனது. இதன் காரணாக சமூகவிரோதச் செயல்கள் நடக்கும் இடமாகவும் மாறிவிட்டது.

 இந்நிலையில், தற்போது பூங்காவை மேம்படுத்தும் பணிகளை, பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு  மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக புதர், முட்செடிகள் அகற்றப்பட்டு பூங்கா பகுதி சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. பூங்கா வளாகத்தைச் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

 பொதுப்பணித் துறையிடம் இருக்கும் நிதியில், இப்போதைக்கு இந்தப் பணிகள் மட்டுமே செய்து முடிக்கப்பட்டுள்ளன. மேலும் செடி, கொடிகளுடன் பூங்காவை பசுமை வளாகமாக மாற்றவும், சிமெண்ட் நாற்காலிகள், சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள் அமைக்கவும் ரூ. 3.5 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து நிதி கோரி, சுற்றுலா துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிதி கிடைக்கப் பெற்றால், விரகனூர் மதகு அணை பூங்காவை புதுப்பொலிவு பெறச் செய்ய முடியும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com