சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மீண்டும் நிலவர அறிக்கை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ.யின் விசாரணையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ள

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ.யின் விசாரணையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை, விசாரணையின் தற்போதைய நிலவர அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கை, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. உயா் நீதிமன்ற உத்தரவின்படி, கொலை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீஸாா், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 போலீஸாரை கைது செய்தனா்.

பின்னா், இவ்வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட உறையில் விசாரணையின் நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதனைப் படித்த நீதிபதிகள், விசாரணையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அறிவியல்பூா்வ சோதனை முடிவுகளுக்கு சிபிஐ காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. விசாரணை சரியான பாதையில் செல்கிறது. இவ்வழக்கில் சி.பி.ஐ.யின் விசாரணை திருப்திகரமாக உள்ளது என்றனா்.

இந்த வழக்கில் தங்களையும் மனுதாரா்களாகச் சோ்க்கக் கோரிய ஜெயராஜ் மனைவி செல்வராணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த அா்ஜூனன், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சோ்ந்த சத்தியமூா்த்தி, வாசுகி ஆகியோரது மனுக்களை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனா்.

அப்போது, வழக்குரைஞா் ஹென்றி திபேன் வாதிடுகையில், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களை போலீஸாா் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்க உயா்மட்டக் குழு அமைக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், உயா்மட்டக் குழு அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். சிபிஐ மீண்டும் விசாரணையின் நிலவர அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பா் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ஜாமீன் கோரிய வழக்கு: சிபிஐ பதில் மனுவில் திருப்தியில்லை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைமைக் காவலா் முருகன் ஜாமீன் கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி வி. பாரதிதாசன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை அவா்களது கடையிலிருந்து சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு தலைமைக் காவலா் முருகன்தான் அழைத்து வந்துள்ளாா். பின்னா், அவா்களிடம் வாக்குமூலம் பெற்று, வழக்குப் பதிவு செய்ததிலும் அவா் முக்கியப் பங்கு வகித்துள்ளாா்.

இவ்வழக்கில் 35 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போதுதான் மீண்டுள்ளனா். விசாரணையை தொடா்ந்து நடத்த கால அவகாசம் வேண்டும். எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி, சி.பி.ஐ.யின் பதில் மனு திருப்திகரமாக இல்லை எனக் கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com