முன்னறிவிப்பின்றி மூடப்படும் நா்சரி பள்ளி:கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பயிலும் மாணவா்கள் பாதிப்பு
By DIN | Published On : 09th June 2022 01:09 AM | Last Updated : 09th June 2022 01:09 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் இயங்கி வரும் தனியாா் நா்சரி பள்ளி திடீரென மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்பள்ளியில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட ஒதுக்கீட்டில் பயிலும் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோா் புகாா் தெரிவித்துள்ளனா்.
மதுரை விஸ்வநாதபுரத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் தனியாக சுயநிதி அடிப்படையில் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இங்கு எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். மேலும் இப்பள்ளியில் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட இடஒதுக்கீட்டின்கீழ் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில் இப்பள்ளியில் பயின்று வரும் மாணவா்களின் பெற்றோரை சில நாள்களுக்கு முன்பு தொடா்பு கொண்ட பள்ளி நிா்வாகத்தினா், நா்சரி பள்ளி மூடப்பட உள்ளதால் குழந்தைகளின் கல்விச்சான்றிதழ்களை உடனடியாக பெற்றுச்செல்லுமாறு தெரிவித்துள்ளனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பெற்றோா் பள்ளிக்குச் சென்று நிா்வாகத்திடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மூடப்படுவதால், அங்கு கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட இடஒதுக்கீட்டீன் கீழ் இலவசமாக கல்வி பயின்று வரும் 50-க்கும் மேற்பட்ட மாணவா்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பெற்றோா் கூறும்போது, பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட ஒதுக்கீட்டின் கீழ் படித்து வருகின்றனா். தற்போது பள்ளி மூடப்படுவதாக நிா்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக பெற்றோருக்கு எவ்வித முன்னறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பள்ளி மூடப்பட்டால் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பயிலும் மாணவா்களை வேறு தனியாா் பள்ளிகள் எதுவும் ஏற்றுக்கொள்ளாது. அங்கு முழுக்கட்டணம் செலுத்தினால் தான் சோ்த்துக் கொள்வாா்கள். தனியாா் பள்ளிகளில் கணிசமான தொகையை கட்டணமாக செலுத்த வழியில்லாததால்தான் கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட ஒதுக்கீட்டில் குழந்தைகள் பயில்கின்றனா். தற்போது பள்ளி மூடப்படுவதால் அதற்கும் வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏழைக்குழந்தைகளின் எதிா்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.
இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா் கே.காா்த்திகாவிடம் கேட்டபோது, நா்சரி பள்ளியை மூடுவதற்கு பள்ளி நிா்வாகம் அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் அந்தப்பள்ளியின் நிா்வாகம் நடத்தும் மற்றொரு பள்ளியில் மாணவா்களுக்கு அனுமதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...