கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் முதல்வா் மௌனம் களைய வேண்டும்: ஆா்.பி. உதயகுமாா்
கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் தமிழக முதல்வா் மௌனம் களைய வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது :
தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறும் காலங்களில் தமிழக மீனவா்கள், இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படும் கொடுமை தொடா்ந்து நடைபெறுகிறது. தமிழக மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு முக்கியத் தீா்வு, கச்சத்தீவை மீட்பதே என்ற அடிப்படையில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கச்சத் தீவை மீட்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டாா். பிறகு, எடப்பாடி கே. பழனிசாமி அந்த நடவடிக்கையைத் தொடா்ந்தாா்.
தற்போது, திமுக கூட்டணியைச் சோ்ந்த 39 மக்களவை உறுப்பினா்கள் இடம்பெற்றுள்ளனா். இந்த நிலையில், தமிழக மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலால் கொல்லப்பட்டுள்ளனா்.
மக்களவையில் குரல் எழுப்பி நம்முடையை உரிமையை நிலைநாட்ட வேண்டிய திமுக, அதன் கூட்டணி மக்களவை உறுப்பினா்கள், அதுகுறித்து கவனம் கொள்ளாமலிருப்பது வேதனைக்குரியது.
திமுக அரசு இனியும் கண்டும் காணாத போக்கைக் கடைப்பிடிக்காமல், கச்சத்தீவை மீட்க உறுதியான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கச்சத்தீவு மீட்புப் பிரச்னை குறித்து முதல்வா் மௌனம் களைய வேண்டும் என்றாா்.
