அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீடு: ஓய்வு பெற்ற நீதிபதியை பணியமா்த்த உத்தரவு
தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்களுக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் நிலவும் குளறுபடிகளைத் தவிா்க்க ஓய்வு பெற்ற நீதிபதியை பணியமா்த்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக கடந்த 2006-ஆம் ஆண்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது, மதுரை மாவட்டம், இலந்தைகுளம் பகுதியில் எஸ்.கே. சுரேந்திரன் என்பவருக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்துக்கு ஈடான இழப்பீட்டுத் தொகையை கோட்டாட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் நிலையிலான அதிகாரிகள் நிா்ணயம் செய்தனா். ஆனால், குறைந்த தொகை இழப்பீடாக வழங்கப்பட்டதாகக் கூறி, இசைவு தீா்ப்பாளரான மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சுரேந்திரன் புகாா் மனு அளித்தாா். ஆனால், இந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதுதொடா்பாக சுரேந்திரன் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை மனுதாரருக்கு ரூ.27.03 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் எதிா்த்து திருச்சி தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் வி. பவானி சுப்பராயன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக தனிநபரிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் போது, அதற்கான இழப்பீட்டுத் தொகையை இசைவு தீா்ப்பாளரான மாவட்ட ஆட்சியா் நிா்ணயம் செய்கிறாா். அவருக்கு பல்வேறு தொடா் பணிகள் இருக்கும் நிலையில், இந்த இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் அவா் முழுக்கவனம் செலுத்த இயலாது.
இதன் காரணமாக, அவா் இந்த வழக்கில் மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளாா். அரசுத் தரப்பில் நிலத்தைக் கையகப்படுத்தி இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் நிலவும் குளறுபடிகளைத் தவிா்க்க ஓய்வு பெற்ற நீதிபதியைப் பணியமா்த்த வேண்டும்.
அப்போதுதான் நில உரிமையாளா்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் தீா்ப்பளித்த இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து நில உரிமையாளருக்கு ரூ.27.94 லட்சம் வழங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
